அனைத்து சோதனைகளையும் சட்டரீதியாக எதிர்கொள்வோம்: எடப்பாடி பழனிசாமி

“அதிமுகவுக்கு நெருக்கடி என்ற பேச்சுக்கே இடமில்லை. சட்டரீதியாக அனைத்து வழக்குகளையும் சந்திப்போம். அனைத்து ரெய்டுகளையும் சட்டரீதியாக எதிர்கொள்வோம்” என்று விஜயபாஸ்கர் வீட்டில் நடந்து வரும் ரெய்டு குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் வெளியீடு இன்று (வியாழக்கிழமை) நடந்தது. வேட்பாளர்கள் விவரங்களை அறிவித்த பின் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

அதிமுகவுக்கு நெருக்கடி என்ற பேச்சுக்கே இடமில்லை. சட்டரீதியாக அனைத்து வழக்குகளையும் சந்திப்போம். அனைத்து ரெய்டுகளையும் சட்டரீதியாக எதிர்கொள்வோம். பெண்கள் விருப்பப்பட்டு கேட்பவர்களுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. சிறுபான்மையினரை பொறுத்தவரை எஸ்டிபிஐ கட்சிக்கு சீட் கொடுத்துள்ளோம். மதச்சார்பற்ற கட்சி இது. வெற்றிவாய்ப்பை பொறுத்து தான் வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளோம். ஜூனியர், சீனியர் எல்லாம் கிடையாது. தலைமைக்கு விசுவாசமாக, உழைப்பு செலுத்துபவருக்கே அதிமுகவில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. புதுமுக வேட்பாளர்களுக்கு சீட் கொடுப்பதில் என்ன தவறு.

கூட்டணி என்பது சூழ்நிலைகளுக்கு தகுந்தவாறு அமைக்கப்பட்டுள்ளது. கூட்டணி இருந்து தான் ஒரு கட்சி வெற்றிபெறும் என்றால் அந்த கட்சி நிலையாக இருக்க முடியாது. அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் திருச்சியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்படுவார்கள்.

பெட்ரோல், டீசல் விலையை திமுக குறைக்க முடியுமா.. அல்லது இண்டியா கூட்டணியா ஆட்சிக்கு வரப்போகிறது குறைப்பதற்கு. 2021 தேர்தல் அறிக்கையிலும் இதேபோல் குறைப்பதாகச் சொன்னார்கள். அதை முதலில் குறைக்கட்டும்.

அதிமுக பலம் வாய்ந்த கட்சி. அதிமுகவின் வலிமையைப் புரிந்துகொள்ள வேண்டும். அதிமுகவை பலவீனமாக எடைபோட வேண்டாம். திமுக எம்பி.,க்கள் செய்த சாதனைகள் என்ன. ஒன்றும் செய்யவில்லை. தமிழகத்துக்கு கிடைக்க கூடிய வெளிமாநில நீரை கூட திமுக பெறவில்லை” என்று தெரிவித்தார்.

அப்போது பத்திரிகையாளர் ஒருவர், ‛‛இஸ்லாமியர் வேட்பாளர் ஒருவர் கூட இல்லையே.. சிறுபான்மையினருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லையா?” என கேள்வி எழுப்பினார். இந்த கேள்வியை கேட்டவுடன் எடப்பாடி பழனிச்சாமி, ‛‛திமுகவில் இருக்கிறதா? நாங்கள் எஸ்டிபிஐ கட்சிக்கு கொடுத்து உள்ளோம். மேலும் எங்களின் கட்சி என்பது மதரீதியாக நடத்தப்படும் கட்சி அல்ல. நீங்கள் கேட்கும் கேள்வியே தவறானது. இது மதசார்பற்ற நாடு. இந்த நாட்டில் அனைத்து மதமும் சமம். இதனால் அனைத்து எங்களின் ஆட்சி மன்ற குழு தேர்வு செய்தவர்களை தான் நாங்கள் வேட்பாளர்களாக அறிவித்துள்ளோம். வெற்றி வாய்ப்பு உள்ளவர்களை தான் வேட்பாளர்களாக நிறுத்தி உள்ளோம். சாதி, மதத்தால் பிரித்ததால் தான் நாடு குட்டிச்சுவராக மாறிவிட்டது. சாதி, மதத்தை பிரித்து பார்க்கக்கூடாது. மதம் சார்ந்த கேள்விகளை இனி கேட்க வேண்டாம். மதத்தின் அடிப்படையில் பிரித்து பார்க்க கூடாது. அதனை முழுவதுமாக அண்ணா திமுக நிராகரிக்கிறது.” என்றார்.

அதிமுக சார்பில் வரும் லோக்சபா தேர்தலில் ஒரு இஸ்லாமியர் கூட வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை. திமுக 21 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில் அவர்களின் வேட்பாளர் பட்டியலிலும் இஸ்லாமியருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மாறாக அதிமுக தனது கூட்டணியில் உள்ள எஸ்டிபிஐ கட்சிக்கு மட்டும் திண்டுக்கல் தொகுதி ஒதுக்கீடு செய்துள்ளது. அங்கு எஸ்டிபிஐ தலைவர் நெல்லை முபாரக் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அதேபோல் திமுக தனது கூட்டணியில் உள்ள இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியை வழங்கி உள்ளது. அங்கு தற்போதைய சிட்டிங் எம்பியான நவாஸ் கனி மீண்டும் போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.