கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமாருக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணையை கட்டியே தீருவோம் என கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவகுமார் திட்டவட்டமாக கூறியிருப்பதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

லோக்சபா தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. திமுகவின் தேர்தல் அறிக்கையில், காவிரியின் குறுக்கே கர்நாடகா அரசு மேகதாது அணை கட்டும் முயற்சிகள் தடுக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார், முதல்வர் ஸ்டாலின் அவரது மாநிலத்தைப் பார்த்துக் கொள்ளட்டும். கர்நாடகாவில் நான் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக பதவி வகிப்பதே காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்காகத்தான். எங்களுக்கு நீதிமன்றங்களில் நியாயம் கிடைக்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. பெங்களூர் குடிநீர் பற்றாக்குறை குறித்து அனைவருக்குமே தெரியும். ஆகையால் எங்களுக்குதான் நியாயம் கிடைக்கும் என கூறியிருந்தார்.

டிகே சிவகுமாரின் இந்த பேச்சு தமிழ்நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

மேகதாது அணை குறித்து ஏற்கனவே கர்நாடக அரசின் முதல்வரும் துணை முதல்வரும் ஆட்சேபமிக்க கருத்துகளை கூறியும் திமுக அரசின் முதல்வர் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் மவுனமாக இருந்த நிலையில், தற்போது “மேகதாது அணையைக் கட்டியே தீருவோம்” என்று கர்நாடக காகிரஸ் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. கூட்டணி தர்மத்திற்காக தமிழ்நாட்டின் உரிமைகள் பறிபோகும் நிலையிலும் மவுனியாக இருக்கும் இந்த விடியா திமுக அரசின் முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய கடும் கண்டனம். ஏற்கனவே மேகதாது விவகாரம் குறித்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் விவாதிக்க அனுமதித்த இந்த விடியா அரசு, இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக கர்நாடக காங்கிரஸ் அரசை எதிர்த்து உரிய சட்ட நடவடிக்கைகளை எடுத்து தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட வலியுறுத்துகிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.