அடிப்படை அறிவுகூட இல்லாமல் இவர்களெல்லாம் பகுத்தறிவை பேசுகிறார்கள்: சீமான்!

நாம் தமிழர் கட்சியின் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதன் பிறகு, பத்திரிகையாளர்களை சந்தித்தார் சீமான். அப்போது பேசிய அவர் மத்தியில் ஆளும் பாஜகவையும், தமிழகத்தில் ஆட்சியமைக்கும் திமுகவையும் சரமாரியாக பேசியிருக்கிறார். உடன், காங்கிரஸையும் விமர்சித்து இருக்கிறார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்குகின்றது. தமிழகம் பொறுத்தவரையில் வருகின்ற ஏப்ரில் 19 தேர்தல் நடக்கவிருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் துவங்கியது. திமுக, அதிமுக கூட்டணியிலான கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். ஆனால், தமிழகத்தில் சுமார் 7 சதவிகித வாக்கு வங்கியை வைத்திருக்கும் நாம் தமிழர் கட்சிக்கு சின்னமே ஒதுக்கப்படாமல் இருக்கிறது. எனினும், தேர்தல் பணியை துவங்கியுள்ளார் ஒருங்கிணைப்பாளர் சீமான்.

அந்த வகையில், நாம் தமிழர் கட்சி சார்பாக நேற்று கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அதன்பிறகு, பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார் சீமான். அப்போது, பாஜக, பாமக, காங்கிரஸ், திமுக என இத்தனை கட்சிகளையும் விமர்சித்து பேசினார் சீமான். நாடாளுமன்ற தேர்தலில் பாமக, பாஜகவுடன் கூட்டணியமைத்துள்ளது. முன்னதாக, பாஜகவின் செயல்பாட்டுக்கு பூஜ்யம்தான் கொடுப்பேன் என பாமக தலைவர் ராமதாஸ் பேசியிருந்தார்.

இதனை பற்றி பேசிய சீமான், “ஐயா அன்றைய நிலைப்பாட்டில் அப்படி சொல்லி இருக்கலாம். இன்றைய சூழலில் இப்படி முடிவெடுத்திருக்கலாம். இது குறித்து அவரிடம் தான் கேள்வி கேட்கவேண்டும். மேலும், அவர் செய்த தவறை நான் செய்யக்கூடாது என்பதற்காகத்தான் நான் தனித்து போட்டியிடுகிறேன். அவரை குறை சொல்வதற்கு பதிலாக, என்னை பாராட்டுங்கள்” என கூறினார். மேலும், ராமதாஸ் கூறிய வார்த்தைக்கு மானப்பட்டு, ரோசப்பட்டு கூட்டணியை மறுத்திருக்க வேண்டும். ஆனால், கூட்டணிக்காக கெஞ்சியது. மான உணர்வு இருந்தால் கூட்டணி சேராதீர்கள்’ என பாஜகவை விமர்சித்தார் சீமான்.

திமுக ஐந்தாறு இடங்களில் அடையாளம் தெரியாத வேட்பாளர்களை நிற்கவைத்துள்ளது. இவையனைத்தும் புரிதல் பேரில் நடக்கிறது என்றும் திடுக் தகவலை கூறினார். பாஜக தனது வாக்கு சதவிகிதத்தை உயர்த்த நினைப்பதாகவும் அதனை தடுக்க வேண்டும் எனவும் கூறினார். மேலும், என்னை பாஜகவின் பி டீம் என திமுகவும் அவர்களின் வாடகை வாய்களும் கூறினார்கள். எனக்கு வோட்டு போட்டால் பாஜக வரும் என்கிறார்கள். எனக்கு வோட்டு போட்டால் நான்தானே வருவேன். இந்த அடிப்படை அறிவுகூட இல்லாமல் இவர்களெல்லாம் பகுத்தறிவை பேசினார்கள்.

சீமானுக்கு வோட்டு போட்டால் பாஜக வளரும் என்கிறார்கள். அதனால், திமுகவிற்கு வோட்டு போட்டார்கள், இப்போது பாஜக வளர்ந்துவிட்டது என்கிறார்கள். புதிய கல்வி கொள்கையை எதிர்ப்பதாக கூறுகிறார்கள், ஆனால், பிரதமரின் ஸ்ரீ பள்ளியை ஏற்று இருக்கிறார்கள். இது வேற கொள்கையா? இந்த பள்ளியில், இஸ்லாமிய கிறிஸ்துவ ஆசிரியர்களை ஏற்பீர்களா? என முதல்வர் ஸ்டாலினை நோக்கி காரசார கேள்வியை எழுப்பினார் சீமான்.

மேலும், மத்திய அரசின் பள்ளிகூடங்கான CBSE பள்ளிகளில் தமிழ் மொழியையும் தமிழ் வரலாறையும் படிக்க முடியுமா? மொழியும் இல்ல, வரலாறும் இல்லைனா என் இனம் எப்படி வாழும் என கேள்வி எழுப்பினார் சீமான். ஆளுநர் குறித்து திமுகவின் தேர்தல் அறிக்கையில் இருக்கும் விஷயங்கள் குறித்து பேசிய சீமான், கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சியில் ஆளுநர் இப்படித்தான் ஆடுனாங்களா ? அவர்கள் நியமிக்கப்பட்டவர்தான் என்றார்.

கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வழங்கமாட்டோம் என கூறினார்கள். இதற்கு திமுக, அதிமுக, பாஜக, இங்கிருக்கும் காங்கிஸின் நிலைப்பாடு என்ன? கர்நாடக காங்கிரஸ் தலைமை, தமிழர்களுக்கு தண்ணீர் கொடுக்க நாங்கள் என்ன முட்டாளா என கூறியதற்கு இவர்களின் கண்டனம் என்ன? என சீறினார் சீமான்.

இப்படி சொல்லும் காங்கிஸுக்கு திமுக 10 இடங்களை கொடுத்திருக்கிறார்கள். தமிழர்களுக்கு தண்ணீர் கொடுக்க முட்டாளா என கேட்டவருக்கு சீட் கொடுக்க நாங்கள் என்ன முட்டாளா என கேட்டிருக்க வேண்டும். இப்படி சொல்லியவர்களுக்கு ஒரு ஓட்டும் இல்லை என்கிற நிலையை உருவாக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், எங்களுக்கு மானம், வீரம் இல்லையா? நாங்கள் என்ன தன்மானம் இழந்த தற்குறிகளா? என பொங்கினார் சீமான்.

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 இடங்களை கொடுத்ததை வன்மையாக சாடினார். கச்சத்தீவு, அணுவுலை, மீத்தேன், ஈத்தேன், தண்ணீர் என எதை செய்தாலும் நாங்கள் வோட்டு போட வேண்டுமா? இந்த விஷயங்களுக்கு பாஜகதான் கண்டித்ததா? பெங்களூருவில் நடந்த குண்டுவெடுப்பு சம்பவத்தில் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசிய ஷோபாவை கண்டித்தார்கள். அவர்களும் மன்னிப்பு தெரிவித்தார். ஆனால், காங்கிரசின் விஷயங்களை ஏன் கண்டிக்கவில்லை என்கிறார் சீமான்.