அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி!

மக்களவைத் தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டார் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இதில் மகளிருக்கு மாதம் ரூ.3000, நீட் தேர்வுக்கு பதிலாக மாற்று தேர்வு முறை என்பது போன்ற வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

அதிமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

* ஆளுநர் பதவி நியமன முறையில் மாநிலங்களின் கருத்தை கேட்டு நியமிக்க வேண்டும்.

* உச்ச நீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தல்

* நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தை சென்னையில் நடத்த வலியுறுத்தல்.

* குற்ற வழக்குச் சட்டங்களின் பெயர்களை இந்தியில் மாற்றியதை கைவிட வலியுறுத்தல்.

* சென்னை உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழ் இடம்பெற நடவடிக்கை.

* மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்ட ஊதியம் ரூ. 450 ஆகவும், வேலை நாட்களை 150 நாட்களாக அதிகரிக்கவும் வலியுறுத்தல்.

* மத்திய அரசின் திட்ட நிதி பகிர்வு விகிதத்தை 75:25 சதவீதமாக மாற்றி அமைக்கவும், மத்திய, மாநில அரசு திட்டங்களுக்கான தொகையை அதிகரிக்கவும், மத்திய அரசு வழங்கும் தமிழ் நாட்டிற்கான ஒதுக்கீட்டை அதிகரிக்கவும், அனைத்து மாநிலங்களுக்கும் சம நீதியோடு திட்டங்கள் கிடைக்கவும் வலியுறுத்தல்.

* நிறுத்தப்பட்ட ரயில் பயணக் கட்டணச் சலுகைகளை மீண்டும் வழங்கிட வலியுறுத்தல்.

* மேகேதாட்டு அணை கட்டும் திட்டத்தை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை.

* முல்லைப் பெரியாறு அணை பிரச்சனைக்கு தீர்வு காணப்படும்.

* பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை மத்திய அரசின் மூலமாக தடுத்து நிறுத்த வலியுறுத்தல்.

* காவிரி – குண்டாறு – வைகை இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றிட நடவடிக்கை.

* கோதாவரி – காவிரி இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றிட மத்திய அரசை வலியுறுத்தி அதற்குத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்தல்.

* நடந்தாய் வாழி காவேரி திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை.

* டெல்டா கால்வாய்களில் கான்கிரீட் திட்டம் செயல்படுத்த வலியுறுத்தல்.

* பாண்டியாறு – புன்னம்புழா திட்ட திட்டங்களை விரைந்து செயல்படுத்திட உரிய நடவடிக்கை.
சிறுவாணி அணையை தூர்வாரி சீரமைக்கும் திட்டம்.

* மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வுக்கு மாற்றுத் தேர்வு முறை. நீட்டுக்கு மாற்றாக +2 தேர்வு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு மாணவர் சேர்க்கை முறை.

* மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை, தேசிய அளவில் ஓர் இயக்கமாகவே செயல்படுத்த நடவடிக்கை.

* குடிமராமத்து திட்டத்தை தேசிய திட்டமாக நாடு முழுவதும் செயல்படுத்த வலியுறுத்தல்.

* உச்சநீதிமன்றத்தில் கச்சத் தீவை மீட்க தொடரப்பட்ட, நிலுவையில் உள்ள வழக்கை விரைவுபடுத்த வலியுறுத்தல்.

* தமிழ்நாட்டைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் உள்ளடங்கிய கடற்படை பாதுகாப்பை வலுப்படுத்த மத்திய அரசை வலியுறுத்தல்.

* இதர பிற்பட்ட வகுப்பினரில் மேல் நிலையினர் எனப்படும் கிரிமிலேயர் வருமான வரம்பை உயர்த்த வலியுறுத்துதல்.

* உயிர் காக்கும் மருந்துகளின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை.

* நெடுஞ்சாலைகளில் இருசக்கர வாகனங்களுக்கென்று தனி பாதை அமைக்க வலியுறுத்தல்.

* மருத்துவ பணியாளர்களுக்கு தனி வாரியம் அமைக்க முயற்சி.

* சாயப் பட்டறை கழிவுநீர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண “ஹைடெக் சுத்திகரிப்பு’’ நிலையங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை.

வக்ஃப் வாரியம் பாதுகாக்கப்படும். இஸ்லாமிய சமுதாயத்தின் நியாயமான கோரிக்கையின் பக்கம் அரணாக நிற்கும்.

* வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காத்திட நலவாரியம்.

* வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்று, ஆபத்தான சூழலில் உள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.

* பழங்குடியினருக்கு சாலை வசதி – “`ஏகலைவா’’ பள்ளி வசதி செய்துதர நடவடிக்கை.

* சிறு, குறு நடுத்தர தொழில் மேம்பாடுபெற மின்சார மானியம், கடன் வசதி, நிலுவை கடன் தவணைக்கு கால அவகாசம், வரி குறைப்பு நடவடிக்கை.

* விவசாயத்தை உயிர்நாடியாக காக்கும் வகையில், தென்னை மற்றும் பனை விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதல், விவசாயப் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை, விதை உற்பத்தி மானியம், விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கும் மானியத் தொகை ரூ. 6,000த்தை ரூ. 12,000ஆக உயர்த்தி வழங்க நடவடிக்கை உள்ளிட்டவை.

* நிபந்தனையின்றி மாநில அரசுகள் கடன்கள் பெற மத்திய அரசின் உத்தரவாதம் கிடைக்க வலியுறுத்தல்.

* இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க நடவடிக்கை.

* பெட்ரோல் – டீசல் விலை நிர்ணயத்தை மத்திய அரசே மேற்கொண்டு, பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் குறைக்க வலியுறுத்தல்

* ஆண்டுக்கு ஆறு எரிவாயு உருளைகளை விலையில்லாமல் அளிக்க வலியுறுத்தல்.

* போதைப் பொருள் கடத்திய திமுக நிர்வாகிகள் மீது, சட்டப்பூர்வமான கடும் நடவடிக்கை.

* நெகிழிப் பொருட்களுக்கான நிரந்தர தடை.

* சீமை கருவேல மரங்களை அகற்றும் திட்டம்.

* மத்திய – மாநில அரசுகளிடையேயான நிதி பகிர்வு சமநிலையில் இருக்கவும் 2026-க்கு பிறகு பொருட்கள் மற்றும் சேவை வரியோடு செஸ் வரியை இணைக்கவும் வலியுறுத்தல்.

* விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்டம்.

* தடையில்லா மும்முனை மின்சாரம்.

* கூட்டாட்சி மொழிகளுக்கு உரிய அங்கீகாரம்.

* மாநிலங்களுக்கு இடையேயான தேசிய வளர்ச்சி ஆணையத்தை செயல்படுத்துதல்

* தமிழகத்தில் பாதுகாப்புத் தளவாட உற்பத்தி மையம்.

* நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளை அகற்றுதல்.

* மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டுவரவும், கோயம்புத்தூரிலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கவும் நடவடிக்கை.

* தமிழகத்தில் புதிய நகரங்களில் மெட்ரோ திட்டங்கள் விரிவாக்கம்.

* மகளிர் உரிமைத் தொகை: ஒவ்வொரு ஏழை குடும்பத் தலைவிக்கும் மாதந்தோறும் ரூ. 3,000.

* இலவச வீட்டு மனை மற்றும் வீடு கட்டும் திட்டம்.

* கிராம பொருளாதாரம் மேம்பாட்டு திட்டம்.

* கிராமப்புற இளைஞர்களுக்கு சர்வதேச அளவிளான விளையாட்டு பயிற்சி மையம்.

* இளைஞர்களுக்கு வேலைக்கு உத்தரவாதம், திறமைக்கும், தகுதிக்கும் ஏற்ற வேலை; வேலைக்கு ஏற்ற ஊதியம் அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை.

* மீனவர்கள் எளிதாக கடன் பெற மீனவர்களுக்கென்று பிரத்யேக வங்கிகள், மீனவர்களுக்கு பிரத்யேகமாக இலவச வீடுகள் கட்டித்தர நடவடிக்கை.

* பழனி-கொடைக்கானல் ரோப்கார் அமைத்தல், கும்பகோணத்தை ஆன்மிக சுற்றுலா மையமாக மேம்படுத்துதல்.

* மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதார உதவித் தொகையாக மாதந்தோறும் ரூ. 5,000/- வழங்குவதற்கு நடவடிக்கை.

* சிறுபான்மையின மாணவர்களின் கல்வி உதவித் தொகை மத்திய அரசால் முழுமையாக வழங்கவும், அப்பெற்றோரின் ஆண்டு உச்ச வரம்பு ரூ. 5 லட்சமாக உயர்த்தவும் வலியுறுத்தல்.

* மூன்றாம் பாலினத்தவரின் வாழ்வாதாரத்திற்கு உறுதி அளித்தல், உதவித் தொகை உயர்த்தி வழங்க நடவடிக்கை.

* ரயில் சேவை கூடுதல் வழித்தடத்தில் அமைத்திட நடவடிக்கை எடுப்போம் போன்ற வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.