பூடான் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி இன்று பூடான் சென்ற நிலையில் அவருக்கு அந்நாட்டின் உயரிய விருதான ‛ஆர்டர் ஆப் தி ட்ரூக் கியால்போ’ வழங்கப்பட்டுள்ளது.

பூடான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்த நாட்டு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பரோவில் இருந்து தலைநகர் திம்பு வரையிலான 45 கிமீ தொலைவுக்கு காத்திருந்த பூடான் மக்கள் இரு நாட்டுக் கொடிகளும் அசைத்து மோடியை வரவேற்றனர். மக்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட மோடி, அவரை வரவேற்க வந்திருந்த குழந்தைகளுடன் நடந்து சென்றார்.

இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக பூடான் விரைந்துள்ள மோடியை பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே தழுவி வரவேற்றார். பாரம்பரியமிக்க பூடானிய துண்டை (ஸ்கார்ப்) பரிசளித்தார்.

இந்த பயணத்தில் இந்தியாவின் உதவியுடன் அங்கு அமைக்கப்பட்டுள்ள தாய் சேய் நல மருத்துவமனையை மோடி திறந்து வைக்கவுள்ளார். மேலும், பூடான் மன்னர் நான்காவது ட்ருக் கியால்போ மற்றும் பிரதமா் ஷெரிங் டோப்கே ஆகியோருடன் பேச்சுவார்த்தையில் பங்கேற்கவுள்ளார். பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் இந்த வரவேற்புக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

இந்தியா உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். குறிப்பாக திம்புவில் இந்திய அரசின் உதவுயுடன் கட்டப்பட்டுள்ள அதிநவீன தாய் மற்றும் குழந்தைகளின் சிகிச்சைக்கான மருத்துவமனையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். டெண்ட்ரெல்தாங் திருவிழா மைதானத்தில் நடைபெறும் கலாச்சார நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளார்.

மேலும் சிப்ட்ரல் ஊர்வலத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அதன்பிறகு பிரதமர் மோடி திம்புவில் உள்ள தாஷிச்சோ ஜோங் அரண்மனையில் பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக்கை சந்தித்து பேசினார். மேலும் பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் மிக உயிரய விருதான ஆர்டர் ஆப் தி ட்ரூக் கியால்போ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. அதனை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார். பூடானை பொறுத்தமட்டில் ஆர்டர் ஆப் தி ட்ரூக் கியால்போ விருது என்பது வாழ்நாள் சாதனைக்கு அரசு சார்பில் வழங்கும் விருதாக உள்ளது. இதுதான் பூடானின் மிகவும் உயரிய விருதாக உள்ளது.