‘இண்டியா’ கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு பாஜக ஆட்சியின் ஊழல்கள் அம்பலமாகும்: முதல்வர் ஸ்டாலின்!

பாஜக ஆட்சியின் ஊழல்கள் அனைத்தும், இண்டியா கூட்டணி ஆட்சி அமைந்த பின்னர் அம்பலமாகும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின், தனது முதல் பிரச்சாரத்தை திருச்சியில் நேற்று தொடங்கினார். சிறுகனூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், பெரம்பலூர் திமுக வேட்பாளர் அருண் நேரு, திருச்சி மதிமுக வேட்பாளர் துரை வைகோ ஆகியோரை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:-

தமிழகத்தில் பாஜகவுக்கு செல்வாக்கு அதிகமாகிவிட்டதால், திமுகவினருக்கு தூக்கம் வரவில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளார். உண்மையில், தங்களது ஆட்சி முடியப்போகிறது என்று கருதுவதால், அவருக்குத்தான் தூக்கம் வரவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி புரிந்த பிரதமர் மோடி, தமிழகத்துக்கு செய்த சிறப்புத் திட்டம் என்று ஏதாவது ஒன்றைச் சொல்ல முடியுமா? சென்னை, தூத்துக்குடி வெள்ளப் பாதிப்புக்கு என்ன செய்தீர்கள்? ஏன் எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டவில்லை? இதற்கெல்லாம் பிரதமர் மோடியிடம் பதில் இல்லை. மக்களின் பிரச்சினைகளை மறைக்க, தேவையில்லாத விஷயங்களைப் பேசி திசை திருப்பிக் கொண்டிருக்கிறார். தேர்தல்களின்போது பாஜக நடத்தும் கபட நாடகங்களை மக்கள் யாருமே நம்பமாட்டார்கள்.

திருச்சி பழைய பால்பண்ணை முதல் துவாக்குடி வரை உயர்மட்டப் பாலத்துடன், அணுகு சாலையும் அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கிறேன். ஊழலற்ற அரசு நடத்துவதாக பிரதமர் மோடி கூறுகிறார். ஆனால், ரூ.7 லட்சம் கோடிக்கு முறைகேடு நடந்துள்ளதாக சிஏஜி அறிக்கை வெளியிட்டது. இதுகுறித்து கேட்டால், பிரதமரால் பதில் சொல்ல முடியவில்லை. அடுத்து அமையப் போகும் இண்டியா கூட்டணி ஆட்சியில், பாஜக ஊழல்கள் அனைத்தும் அம்பலமாகும். பாஜகவின் ஊழல்களை மறைக்க, டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை கைது செய்துள்ளனர். பாஜகவின் தோல்வி பயம்தான் இதற்கு முக்கியக் காரணம்.

தமிழகத்தில் ஆளுநரை வைத்து திமுக ஆட்சியை மிரட்டிப் பார்க்கின்றனர். பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துவைக்க வேண்டும் என்று கேட்டபோது, ஆளுநர் மறுத்துவிட்டாார். உச்ச நீதிமன்றம் கண்டித்த பிறகே, பதவிப் பிரமாணத்துக்கு ஆளுநர் மாளிகையிலிருந்து அழைப்பு வந்தது.
ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற, அமைச்சர் பொன்முடி பதவிப் பிரமாணம் நிகழ்ச்சியில் பங்கேற்றேன். அப்போது `தேர்தல் வேலையை முதன்முதலாக ராஜ்பவனிலிருந்து தொடங்குகிறேன்’ என்று கூறியதும், ஆளுநர் ஆர்.என்.ரவி ‘பெஸ்ட் ஆஃப் லக்’ என்றார். ராஜ்பவனில் தொடங்கிய இந்தப் பயணம், குடியரசுத் தலைவர் மாளிகை வரை செல்வதற்கான அடையாளமாகும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

கூட்டத்தில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ரகுபதி, சிவசங்கர், சிவ.வீ.மெய்யநாதன், எம்.பி.க்கள் திருச்சி சிவா, ஆ.ராசா உள்பட பலர் கலந்து கொண்டனர்.