2026-ல் ஆட்சியை பிடிக்கவே பாஜகவுடன் கூட்டணி: அன்புமணி!

அதிமுக, திமுகவுடன் கூட்டணி வைத்து எந்தப் பயனும் இல்லை.2026-ல் ஆட்சியைப் பிடிக்கவே பாஜகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறோம் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பாமக தொண்டர்களுக்கு அன்புமணி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கல் தொடங்கிவிட்டது. தேர்தலை எதிர்கொள்ள எப்போதோ தயாராகி விட்ட நாம், பாஜக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து களத்தில் இறங்கியிருக்கிறோம்.

பாமக தொடங்கப்பட்டதன் நோக்கம் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பதுதானே தவிர, அதிமுகவையும், திமுகவையும் ஆட்சியில் அமர்த்துவது அல்ல என்பதுதான் ராமதாஸ் நமக்கு கற்றுத் தந்த பாடம். அதை மனதில் கொண்டுதான் இப்போது கூட்டணி அமைத்திருக்கிறோம். அதிமுக, திமுகவுடன் நாம் கூட்டணி அமைக்கும் ஒவ்வொரு தேர்தலிலும் பாமகவின் வாக்குகள் முழுமையாக அக்கட்சிகளுக்குக் கிடைக்கும். அவற்றின் வெற்றிக்கு வழிவகுக்கும். ஆனால், நாம் போட்டியிடும் தொகுதிகளில் அந்தக் கட்சிகளின் வாக்குகள் முழுமையாக நமக்கு கிடைக்காது. அதன் காரணமாகவே பல தருணங்களில் நாம் வெற்றி பெற முடியாமல் போகிறது.

பாமக கூட்டணி அமைக்கத் தொடங்கியதிலிருந்து தற்போது வரை நமது வாக்குகளால் திமுகவையும், அதிமுகவையும் ஆட்சியில் அமர்த்துகிறோம். அதனால் நமக்கோ, மக்களுக்கோ எந்தப் பயனும் இல்லை. 2026-ம் ஆண்டில் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பாமக செயல்பட்டு வருகிறது. அதற்கான செயல்திட்டத்தின் ஓர் அங்கம்தான் இன்றையத் தேர்தல் கூட்டணி ஆகும்.

தமிழகத்துக்கு நல்லதொரு எதிர்காலத்தை அமைத்துத் தரவேண்டும் என்ற கடமை பாமகவுக்கு உண்டு. அந்தக் கடமையை நிறைவேற்றுவதற்கு முன்பாக, முக்கியமான 2024 மக்களவைத் தேர்தலில் பாமகவுக்கும், நம்முடன் கூட்டணி அமைத்திருக்கும் பாஜக உள்ளிட்ட பிற கட்சிகளுக்கும் வெற்றியைத் தேடித்தர வேண்டியது கட்டாயம். இதை உணர்ந்து களப் பணியாற்றுவோம். இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.