மாஸ்கோ தீவிரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம்!

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்தில் 60 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்றிரவு ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ‘பிக்னிக்’ எனும் ராக் இசைக்குழுவினர் கச்சேரியை நடத்தியிருந்தனர். இந்த கச்சேரியில் அடையாளம் தெரியாத 3-5 நபர்கள் கொண்ட குழு உள்ளே புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கிறது. இந்த தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டதுடன் 145க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். இதில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தாக்குதல் நடத்தியவர்கள் துப்பாக்கிகளுடன் வெடிபொருட்களையும் பயன்படுத்தியுள்ளதாக அந்நாட்டு காவல்துறை கூறியுள்ளது. சம்பவத்தையடுத்து கச்சேரி நடந்த கட்டிடத்தை பாதுகாப்பு அதிகாரிகள் சுற்றி வளைத்துள்ளனர். தற்போது வரை 100 பேர் கட்டிடத்திலிருந்து பத்திரமாக மீட்கப்பட்டிருக்கின்றனர். இரவு முழுவதும் மீட்பு நடந்திருக்கிறது.

இந்த சம்பவம் குறித்து மாஸ்கோ மேயர் சோபியான் கூறுகையில், “குரோகஸ் சிட்டி மையத்தில் பயங்கரமான சம்பவம் நடந்திருக்கிறது. இதில் உயிரிழந்தவர்களுக்கு எனது அஞ்சலியையும், அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா, இந்த சம்பவத்தை கொடூரமான குற்றம் என்று விமர்சித்துள்ளார். உலக நாடுகள் இந்த சம்பவத்தை கண்டிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறார். தற்போது உக்ரைனுடன்-ரஷ்யா போரில் ஈடுபட்டு வருகிறது. எனவே, உக்ரைன் கிளர்ச்சி படைகள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று ரஷ்ய தரப்பு சந்தேகித்திருந்தது.

அமெரிக்க இந்த தாக்குதலை கண்டித்திருந்தாலும், உக்ரைன் தொடர்பு எதுவும் இதில் இல்லை என்று கூறியுள்ளது. தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி இதனை விளக்கியுள்ளார். அதாவது “மாஸ்கோவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உக்ரைனியர்கள் யாரும் ஈடுபட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை” என்று விளக்கமளித்துள்ளார்.

இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது. ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் இது போன்ற சம்பவங்கள் நடப்பது மிகவும் அரிது. ரஷ்யாவின் உளவுத்துறை மிகவும் சக்திவாய்ந்ததாகும். அப்படி இருக்கும்போது இந்த தாக்குதலை எப்படி முன்கூட்டியே கணிக்க முடியாமல் போனது? என்று கேள்வி எழுந்திருக்கிறது. மறுபுறம், ரஷ்யா கொஞ்சம் கொஞ்சமாக பலவீனமடைந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில், “மாஸ்கோவில் நடந்த கொடூரமான தீவிரவாத தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்காக பிரார்த்திக்கிறோம். துயரமான நேரத்தில் ரஷ்ய மக்களுடன் இந்தியா தனது ஒற்றுமையையும், ஆதரவையும் தெரிவித்துக்கொள்கிறது” என்று கூறியுள்ளார்.