அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வழக்கு: அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் புதிய மனு!

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த கோர்ட்டில் சமர்ப்பித்த விவரங்களை கேட்டு புதுக்கோட்டை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது.

அதிமுக ஆட்சியின் போது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் சி. விஜயபாஸ்கர். கொரோனா காலத்தின் போது பெரிதும் பேசப்பட்டவர். அதிமுகவில் மிக முக்கிய நபராக இருக்கும் விஜயபாஸ்கர் வீட்டில் நேற்று முன் தினம் காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். புதுக்கோட்டை இலுப்பூரில் உள்ள அவரது வீட்டிற்கு 3 கார்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் மாலை வரை சோதனை நடத்தினர். மதுரை மற்றும் சென்னையை சேர்ந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தினர். இதேபோல் சென்னையில் உள்ள அவரது வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

விஜயபாஸ்கர் மீது புதுக்கோட்டை நீதிமன்றத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை இந்த சோதனையை மேற்கொண்டதாக தகவல் வெளிவந்தது. இந்த நிலையில், இதனை உறுதிப்படுத்தும் வகையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாக விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்துள்ள, புதுக்கோட்டை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விவரங்களை கேட்டு அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது. மேலும், அந்த வழக்கில் தங்களையும் சேர்க்க கோரி அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது.

விஜயபாஸ்கர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டில் லஞ்ச ஒழிப்புத்துறையும் விஜயபஸ்கர் வீட்டில் சோதனை நடத்தியது. ஆர்.கே நகர் சட்டமன்ற இடைத்தேர்தலின் போது வருமான வரித்துறை அதிகாரிகள் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை மேற்கொண்டு இருந்தனர்.

இந்த நிலையில்தான், தற்போது லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கும் சூழலில் விஜபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சில ஆண்டுகளுக்கு முன்பு வருமானவரித்துறை சோதனையின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், அமலாக்கத்துறை விஜயபாஸ்கர் மீதான பிடியை இறுக்க தயாராகியுள்ளது. ஏற்கனவே, பாஜகவுடன் கூட்டணியில் இருந்து விலகியதால் அதிமுக பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கூறி வந்த நிலையில், தற்போது அமலாக்கத்துறை சோதனை நடத்தியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.