தமிழிசையை பார்த்த உடன் கட்டி அணைத்த தமிழச்சி தங்கபாண்டியன்!

தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் சந்தித்த போது அவர்கள் கட்டியணைத்து பரஸ்பரம் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் லோக்சபா தேர்தல் இந்த முறை ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடக்கிறது. வாக்குப்பதிவுக்கு ஒரு மாதத்திற்குக் குறைவான காலமே இருப்பதால் அனைத்து கட்சிகளும் பிரச்சாரத்தைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே தென்சென்னை வேட்புமனு தாக்கலின் போது சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது. தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் தமிழிசை சவுந்தரராஜன் வேட்புமனு தாக்கலின் போது சந்தித்துக் கொண்ட நிலையில், அவர்கள் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த வாரம் தொடங்கியது. நாளை மறுநாள் அதாவது மார்ச் 27ஆம் தேதியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடையும் நிலையில், முக்கிய கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் இப்போது தான் வேட்புமனு தாக்கல் செய்து வருகிறார்கள். அப்படி தான் தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் இன்று தேர்தல் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் தேர்தல் அலுவலகத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டு இருந்தார். வேட்புமனு தாக்கல் செய்த பிறகு வெளியே வந்த தமிழச்சி தங்கபாண்டியன் அங்கே தமிழிசையைப் பார்த்த உடன் கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது அருகே கரு நாகராஜன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் அருகே இருந்த நிலையில், அவர்களுக்கும் தமிழச்சி தங்கபாண்டியன் வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இருவரது அப்பாவும் எம்எல்ஏ குடியிருப்பில் அருகருகே தான் இருந்தனர். அப்போது முதலே இருவருக்கும் இடையே நட்பு இருக்கிறது. அரசியில் எதிர் எதிர் பாதையைத் தேர்வு செய்தாலும் இவர்களது நட்பு இன்னும் தொடர்கிறது. பல பகுதிகளில் திமுக அதிமுக இடையே சிறு விஷயங்களுக்குக் கூட சண்டை ஏற்படும் நிலையில், இந்தச் சம்பவத்தின் வீடியோ வேகமாகப் பரவி வருகிறது. இதுதான் ஆரோக்கியமான அரசியல் என்று நெட்டிசன்கள் பலரும் கருத்துகள் கூறி வருகின்றனர்.

தென் சென்னை தொகுதியைப் பொறுத்தவரை அங்கே இப்போது தமிழச்சி தங்கபாண்டியன் எம்பியாக இருக்கிறார். இந்த முறையும் மீண்டும் அவருக்கே திமுக தலைமை வாய்ப்பு வழங்கி இருக்கிறது. அதேபோல பாஜக சார்பில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார். தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் இப்போது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டுப் போட்டியிடுகிறார். அதேபோல அதிமுக சார்பில் டாக்டர் ஜே. ஜெயவர்தன் போட்டியிடுகிறார். கடந்த லோக்சபா தேர்தலில் திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிட்டார். அதிமுக- பாஜக கூட்டணி இருந்த நிலையில், அதிமுக சார்பில் ஜே. ஜெயவர்தன் களமிறஙினார். மேலும், மக்கள் நீதி மய்யம் சார்பில் ஆர் ரங்கராஜன் போட்டியிட்டார். அதில் தமிழச்சி தங்கபாண்டியன் 5.64 லட்சம் வாக்குகள் பெற்று, சுமார் 2.62 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் 3 லட்சம் வாக்குகளைப் பெற்ற நிலையில், மக்கள் நீதி மய்யம் சுமார் 1.35 லட்சம் வாக்குகளைப் பெற்றது.