வட சென்னை தொகுதியில் திமுக – அதிமுக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. முதலில் வந்தது யார் என்பது தொடர்பாக அமைச்சர் சேகர் பாபு- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி நடக்கிறது. வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடந்து வருகிறது. அந்த வகையில் 2 நாட்கள் விடுமுறைக்கு பின் இன்று வேட்புமனு தாக்கல் சூடுபிடித்துள்ளது. அதிமுக, திமுக, பாஜக என கட்சியின் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்க செய்து வருகிறார்கள். இதன்படி இன்று மதிய வேளையில், அதிமுக சார்பில் வட சென்னை லோக்சபா தொகுதியில் போட்டியிடும் ராயபுரம் மனோ வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். இதேபோல், திமுக சார்பில் வட சென்னையில் போட்டியிடும் கலாநிதி வீராசாமியும் வந்திருந்தனர். அப்போது இருவரும் ஒரே நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்ததாக கூறப்படுகிறது. இதனால் யார் முதலில் வேட்பு மனு தாக்கல் செய்வது என்பதில் வாக்குவாதம் ஏற்பட்டது. அதிமுக சார்பில் வந்திருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும், திமுகவின் அமைச்சர் சேகர்பாபுவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
முதலில் வந்தது அதிமுகதான் என தேர்தல் அதிகாரி கூறியும் சேகர் பாபு ஏற்க மறுத்து வாக்கு வாதம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால், சுமார் 45 நிமிடங்களுக்கும் மேலாக வேட்பு மனு தாக்கல் செய்வது தாமதம் ஆனது. இதற்கு மத்தியில் பா.ஜ.க வேட்பாளர் பால் கனகராஜ் வேட்பு மனு தாக்கல் செய்ய அங்கு வந்தார். இதனால், வேட்பு மனு தாக்கல் செய்யும் அலுவலகம் பரபரப்பாக காட்சி அளித்தது. முதலில் சுயேட்சை வேட்பாளரிடம் வேட்பு மனுவை வாங்கிவிட்டு அதன்பிறகு டோக்கன் அடிப்படையில் வேட்பு மனுவை பெறுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் கூறினார். இதனை திமுக – அதிமுக ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. வட சென்னையில் திமுகவில் கலாநிதி வீராசாமியும், அதிமுகவில் ராயபுரம் மனோவும் போட்டியிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.