விருதுநகரில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் மனு தாக்கல்!

தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனும், பாஜக வேட்பாளர் ராதிகா சரத் குமாரும் பரஸ்பரம் கைகுலுக்கிக் கொண்டு நலம் விசாரித்து வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

மக்களவைத் தேர்தல் களம் களைகட்டியுள்ள சூழலில் இன்று (மார்ச் 25) தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகளும் விறுவிறுப்பாக வேட்புமனுத் தாக்கலில் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் இன்று திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மாணிக்கம் தாக்கூர், அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் ஆகியோர் தொடர்ச்சியாக வேட்புமனு தாக்கல் செய்தனர்.

வேட்புமனு தாக்கலுக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் வேட்பாளார் மாணிக்கம் தாக்கூர், “இந்தத் தேர்தல் மிக முக்கியமான தேர்தல். இது இந்தியாவின் ஜனநாயகத்தைக் காப்பாற்றும் தேர்தல். இந்தியா ஒரு பாசிச சக்தியின் கைகளில் சிக்காமல் தடுத்து நிறுத்துவதற்கான கடைசி வாய்ப்பு. 50 நாட்களுக்குள் 2 மாநில முதல்வர்களை மத்திய அரசு அதன் அமைப்புகள் மூலம் கைது செய்துள்ளது. இந்த அரசை இப்போது வீழ்த்தாவிட்டால். 2029ல் ரஷ்யாவில் அமைந்த புதின் ஆட்சி முறை போன்ற ஆட்சி இங்கே வரும். இந்தியா முழுவதும் அமலாக்கத் துறையின் சட்டவிரோத கைது நடவடிக்கைகள் தொடர்கிறது. பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸின் அனைத்து நிதி ஆதாரங்களும் வருமான வரித் துறையால் முடக்கப்பட்டிருக்கிறது. மத்திய அமைப்புகளை தனக்கு ஆதாயம் தரும் வகையில் மத்திய அரசு பயன்படுத்திக்க் கொள்கிறது. இந்த அரசு வீழ்த்தப்பட வேண்டும். விருதுநகருக்கான திட்டங்கள் எல்லாம் காகிதத்தில் தான் இருக்கின்றன. விருதுநகரை பாஜக மோடி அரசு தொடர்ந்து வஞ்சிக்கிறது. ஆனால், இண்டியா கூட்டணி ஆட்சி விருதுநகருக்கு தீர்வுகளைக் கொண்டுவரும்” என்றார்.

விருதுநகர் தொகுதியில் திரைப்பிரபலங்கள் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு, “மக்களாட்சியில் அனைவருக்கும் பங்கு உண்டு. அதனால் திரைத்துறையினரும் நிற்கலாம். ஆனால், தேர்தலில் கொள்கைகளை, வாக்குறுதிகளைக் கூறியே வாக்கு சேகரிக்க முடியும் ஒருவரின் தொழிலை வைத்து அல்ல” என்று மாணிக்கம் தாக்கூர் பதிலளித்தார்.

தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனும், பாஜக வேட்பாளர் ராதிகா சரத் குமாரும் பரஸ்பரம் கைகுலுக்கிக் கொண்டு நலம் விசாரித்து வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர். அதேபோல் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் நடிகர் சரத்குமாரும் கைகுலுக்கி பேசிக் கொண்டனர். ராதிகாவுக்கு மாற்று வேட்பாளராக சரத்குமாரும் மனு தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.