டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற இடதுசாரி மாணவர் அமைப்புகளை சேர்ந்த இளைஞர்களுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் மனோ தங்கராஜ் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவை தேர்தலுக்கு முன்பு அத்தனை வட இந்திய ஊடகங்களும் சங்க பரிவாரின் மாணவர் அமைப்பான ஏபிவிபி(ABVP) பெரும் வெற்றியை ஈட்டும் என திட்டவட்டமாக கூறினர். வாக்கு எண்ணிக்கையின் போதும் அப்படியே ஒரு பிம்பத்தை உருவாக்கினர். கடைசியில் ஏபிவிபி இருந்த இடமே தெரியாமல் சென்றுள்ளது.
இதுதான் வருகின்ற பாராளுமன்ற தேர்தலுக்கான டிரெய்லர். ஊடகங்கள் “பாஜக 400 இடங்களில் வெற்றி பெறும், தமிழ்நாட்டில் 25% வாக்குகளை பெறும்” என நிர்பந்தத்தால் மிகைபடுத்தி பேசுகின்றன. ஆனால் தேர்தலில் பாஜக படுதோல்வி அடையத்தான் போகிறது. அதுவும் குறிப்பாக தமிழ் நாட்டில் நோட்டோ (NOTA) வுக்கு கிடைக்கும் வாக்குதான் பிஜேபிக்கு கிடைக்க போகிறது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்லைக்கழகத்தின் மாணவர்கள் சங்கம் தேர்தல் நடைபெற்றது. அதில், ஏ.பி.வி.பி வேட்பாளரான உமேஷ் சி அஜ்மீராவை வீழ்த்தி, ஆல் இந்தியா மாணவர்கள் சங்க வேட்பாளர் தனஞ்ஜெயா வெற்றி பெற்றார்.