“தேர்தலுக்கு தேர்தல் உறுதியற்ற வாக்குறுதிகளை அளித்து ஓட்டுக்களை பெற்று விடலாம் என திமுக நினைக்கிறது” என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
அதிமுக கூட்டணியில் தென்காசி மக்களவைத் தொகுதி புதிய தமிழகம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. தென்காசியில் அக்கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். மதுரையில் இருந்து இன்று கார் மூலம் தென்காசி சென்றார். அவருக்கு ஶ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையத்தில் கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். அப்போது அவர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
மக்களவைத் தேர்தலில் அதிமுக, புதிய தமிழகம், தேமுதிக, எஸ்டிபிஐ கட்சிகள் இணைந்து வெற்றிக் கூட்டணி அமைத்துள்ளோம். திருச்சி மாநாடு தேர்தல் வெற்றிக்கான அச்சாரமாக உள்ளது. தென்காசி தொகுதியில் தண்ணீர் பிரச்சினை, வேலைவாய்ப்பு உள்ளிட்டவை முக்கிய பிரச்சினைகளான உள்ளன. கடந்த 5 ஆண்டுகள் எம்பிக்களாக தேர்வு செய்யப்பட்ட திமுக கூட்டணி கட்சியினர் தமிழகத்துக்கு எதுவும் செய்யவில்லை. 27-ம் தேதி மனு தாக்கல் செய்ய உள்ளேன். ஏப்ரல் 3-ம் தேதி தென்காசி மக்களவைத் தொகுதிக்கு பிரத்யேக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்.
தேர்தல் ஆணையத்திடம் சின்னம் கேட்டு விண்ணப்பித்துள்ளோம். டிவி சின்னமும் கேட்டுள்ளோம். எந்தச் சின்னம் வழங்கினாலும் அதை மக்களிடம் கொண்டு சென்று வெற்றி பெறுவோம். வாக்குப் பதிவு இயந்திரத்தில் சின்னத்துடன், பெயர், புகைப்படமும் இடம்பெற்று உள்ளது. அதனால், வாக்காளர்கள் சரியாக வாக்களிப்பர். கடந்த மக்களவை, சட்டப்பேரவை தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றிவிட்டார்களா? தேர்தலுக்கு தேர்தல் உறுதியற்ற வாக்குறுதிகளை அளித்து ஒட்டுக்களை பெற்று விடலாம் என திமுக நினைக்கிறது. இவ்வாறு கிருஷ்ணசாமி கூறினார்.