உஜ்ஜைனி மகா காலேஸ்வரர் கோயில் கருவறையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 14 பூசாரிகள் காயம் அடைந்தனர்.
மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் புகழ்பெற்ற மகா காலேஸ்வரர் கோயில் உள்ளது. நாட்டின் 12 ஜோதிர்லிங்க தலங்களில் இக்கோயிலும் ஒன்றாகும். இக்கோயிலில் ஹோலி பண்டிகை நாளாக நேற்று காலையில் பஸ்ம ஆரத்தி காண்பிக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் சிலர் வண்ணப்பொடியை உள்ளே வீசியதை தொடர்ந்து கருவறைக்குள் தீப்பற்றி அறை முழுவதும் பரவியது. வண்ணப் பொடியில் ரசாயனம் கலந்திருக்க வாய்ப்பு இருப்பதால் அது தீப்பற்றியிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த தீ விபத்தில் 14 பூசாரிகள் காயம் அடைந்தனர். இவர்கள் உடனடியாக உஜ்ஜைனியில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 8 பேருக்கு 25 சதவீத காயம் ஏற்பட்டுள்ளதாகவும் இவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். விபத்து குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூடுதல் மாவட்ட ஆட்சியர் அனுகூல் ஜெயின் கூறும்போது, “கோயிலில் நேற்று விவிஐபி.க்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் இருந்தனர். என்றாலும் தீ விபத்தில் பக்தர்கள் எவரும் காயம் அடையவில்லை. விசாரணை அறிக்கை 3 நாட்களில் அரசிடம் சமர்ப்பிக்கப்படும்” என்றார்.
இந்த விபத்து மிகுந்த வேதனை அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். இதுகுறித்து பிரதமர் விடுத்துள்ள செய்தியில் “உஜ்ஜைனி மகா காலேஸ்வரர் கோயிலில் நடந்த விபத்து மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த விபத்தில் காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநிலஅரசின் மேற்பார்வையில் உள்ளாட்சி நிர்வாகம் அனைத்து உதவிகளும் செய்து வருகிறது” என்று கூறியுள்ளார்.
விபத்து குறித்து முதல்வர் மோகன் யாதவ் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், “நடந்த சம்பவம் மிகவும் துரதிருஷ்டவசமானது. என்றாலும் நிலைமை தற்போது கட்டுக்குள் உள்ளது. தீ விபத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். மேலும் தீ விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு முதல்வர் மோகன் யாதவ் ரூ.1 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.
தீ விபத்தில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய பிரார்த்தனை செய்வதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.