லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் கைது, காங்கிரஸ் வங்கி கணக்கு முடக்கம் உள்ளிட்ட பிரச்னைகள் சலசலப்புகளை கிளப்பியுள்ளன. இந்நிலையில், இந்தியாவில் மக்களின் ‘அரசியல் உரிமைகள்’ பாதுகாக்கப்படும் என நம்புகிறோம் என ஐநா பொதுச்செயலாளர் கருத்து தெரிவித்திருக்கிறார்.
இந்த லோக்சபா தேர்தலில் பாஜக 370 தொகுதிகளை குறி வைத்திருக்கிறது. ஆனால் இத்தனை தொகுதிகளை வெல்வதற்கான சாத்திய கூறுகள் குறைவாகவே இருப்பதாக கருத்துக்கணிப்புகள் கூறி வருகின்றன. சூழல் இப்படி இருக்கையில், அரவிந்த் கெஜ்ரிவால் கைது, காங்கிரஸ் வங்கி கணக்கு முடக்கம் உள்ளிட்ட பிரச்னைகள் சலசலப்புகளை கிளப்பியுள்ளன. கடந்த 2021-22ம் ஆண்டு டெல்லி யூனியன் பிரதேசத்தில் புதிய மதுபான கொள்கை அறிவிக்கப்பட்டது. அதாவது டெல்லியில் மதுபான விற்பனை அரசிடம் இருந்து 4 கார்ப்பரேசன்கள் கைகளுக்கு மாறின. மொத்த மது விற்பனையில் 50% இந்த 4 கார்ப்பரேசன்கள் பகுதிகளில் நடைபெறுகிறது. டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு லைசன்ஸ் தரப்பட்டது. இதில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன என்பதுதான் புகார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை 9 முறை கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியது. ஆனால், விசாரணைக்கு ஆஜராகாத கெஜ்ரிவால், டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்றம் கைவிட்டுவிட்டது. இதனையடுத்து கெஜ்ரிவாலின் வீட்டில் அதிரடி ரெய்டு நடத்தி அவரை அமலாக்கத்துறை கைது செய்தது. ஏற்கெனவே ஜார்க்கண்ட் முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரனையும் சமீபத்தில்தான் அமலாக்கத்துறை கைது செய்திருந்தது. இதனையடுத்து கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருப்பது கடும் விமர்சனங்களை கிளப்பியது.
ஹேமந்த் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்த பின்னர்தான் கைது செய்யப்பட்டார். ஆனால், கெஜ்ரிவால் முதலமைச்சராக இருக்கும்போதே அமலாக்கத்துறை அவரை கைது செய்துள்ளது. இந்திய வரலாற்றில் முதலமைச்சர் யாரும் இதற்கு முன்னர் இப்படி கைது செய்யப்படவில்லை. இந்த விவகாரம் இந்தியா மட்டுமல்லாது சர்வதேச நாடுகளிலிருந்தும் விமர்சனங்களை பெற்றிருந்தது. அதாவது, அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர், “அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட செய்திகளை அமெரிக்க அரசு கண்காணித்து வருகிறது. சிறையில் உள்ள டெல்லி முதல்வர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருக்கு நியாயமான, வெளிப்படையான மற்றும் சரியான நேரத்தில் சட்டச் செயல்முறையை உறுதி செய்ய, இந்திய அரசை ஊக்குவித்து வருகிறோம்” என்று கூறியிருந்தார்.
அதேபோல ஜெர்மனியும், “நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகள் அனைத்தும் அரவிந்த் கெஜ்ரிவாலின் வழக்கில் பயன்படுத்தப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் மற்ற இந்தியக் குடிமக்களைப் போலவே கெஜ்ரிவாலும் நியாயமான, பாரபட்சமற்ற விசாரணைக்குத் தகுதியானவர்” என்று கூறியிருந்தது.
சர்வதேச நாடுகளின் கருத்துக்கள் இந்தியாவுக்கு தலைவலியை கிளப்பியுள்ள நிலையில், தற்போது ஐநாவும் கெஜ்ரிவால் விவகாரத்தில் இந்தியாவை சூசகமாக விமர்சித்துள்ளது. அதாவது, “இந்தியாவில் தேர்தல் நடைபெறும் சூழலில், மக்களின் ‘அரசியல் மற்றும் சிவில் உரிமைகள்’ பாதுகாக்கப்படும் எனவும், அனைவரும் சுதந்திரமாகவும் நியாயமாகவும் வாக்களிக்க முடியும் எனவும் நாங்கள் நம்புகிறோம்” என்று ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
ஐநாவின் இந்த கருத்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கத்திற்கும் பொருந்தும் என எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன. சில நாட்களுக்கு முன்னர் ரூ.200 கோடி வரி பாக்கி என்று கூறி காங்கிரஸ் வங்கி கணக்கை வருமான வரித்துறை முடக்கியது. இதனையடுத்து இப்போது ரூ. 1700 கோடி செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.