அனைத்து கட்சிகளையும் ஒழித்து விடுவோம் என்று பா.ஜ.க. எச்சரிக்கை விடுத்திருப்பதாக ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருப்பது அனைத்து கட்சிகளுக்கும், பொதுமக்களுக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை என முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
தேர்தல் பத்திரங்கள் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ரூ.8,250 கோடியை வாங்கிய பா.ஜ.க., இப்பொழுது காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது வருமான வரி, வட்டி, அபராதம் உள்ளிட்டவற்றை விதிக்கிறது. இது அனைத்து கட்சிகளுக்கும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை. அதற்கும் மேலாக மக்களுக்கும் இது ஒரு எச்சரிக்கை. அனைத்து கட்சிகளையும் நாங்கள் ஒழித்து விடுவோம் என்றும், நாங்கள் மட்டும்தான் கட்சி நடத்த முடியும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுக்கிறார்கள். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது உண்மையில் ஒரே நாடு, ஒரே கட்சி ஆகும். அந்த எச்சரிக்கை அனைவருக்கும் விடுக்கப்பட்டிருக்கிறது. மக்கள் விழித்துக்கொள்வார்கள்.
அரசியல் கட்சிகளுக்கு வருமான வரி செலுத்த வேண்டியதில்லை என்ற விதி உள்ளது. ஆனால், ஏதோ ஒரு பிழையை கண்டுபிடித்ததாகவும், அதற்கான தொகை, வட்டி, அபராதம் என ரூ.1,821 கோடி வருமான வரி செலுத்த வேண்டும் எனவும் காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியை முடக்கும் எண்ணத்தில்தான் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தேசிய கட்சியையும் முடக்கிவிட்டு, மாநில கட்சித் தலைவர்களையும் அச்சுறுத்திவிட்டு நாட்டில் ஒரே கட்சியாக பாஜக மட்டுமே இருக்க வேண்டும் என்பதுதான் மோடியின் எண்ணம். மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் நாட்டில் ஜனநாயகம் உயிரோடு இருக்காது. எனவே, ஜனநாயகத்தை காப்பாற்றவும், ஏழை எளியோருக்கு திட்டங்களை செயல்படுத்தவும் இண்டியா கூட்டணியை ஆதரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.