முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ் உள்ளிட்ட நால்வருக்கு பாரத் ரத்னா விருது வழங்கப்பட்டது. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை அவர்களின் வாரிசுகளுக்கு வழங்கினார்.
முன்னாள் பிரதமர்கள் பி.வி. நரசிம்ம ராவ், சவுத்ரி சரண் சிங், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். ஸ்வாமிநாதன், பிகார் முன்னாள் முதல்வர் கர்ப்பூரி தாக்கூர், முன்னாள் துணைப் பிரதமர் எல்.கே. அத்வானி ஆகிய ஐவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்ற அறிவிப்பை மத்திய அரசு கடந்த மாதம் வெளியிட்டது. அதன் அடிப்படையில் குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், மறைவுக்குப் பிந்தைய விருதாளர்களான பி.வி. நரசிம்ம ராவ், சவுத்ரி சரண் சிங், எம்.எஸ். ஸ்வாமிநாதன், கர்ப்பூரி தாக்கூர் ஆகியோரின் வாரிசுகளிடம் பாரத் ரத்னா விருதை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்.
பி.வி. நரசிம்ம ராவுக்கான பாரத் ரத்னா விருதை அவரது மகன் பி.வி. பிரபாகர் ராவ் பெற்றுக்கொண்டார். சவுத்ரி சரண் சிங்குக்கான பாரத ரத்னா விருதை அவரது பேரன் ஜெயந்த் சிங் பெற்றுக்கொண்டார். எம்.எஸ். ஸ்வாமிநாதனுக்கான விருதை அவரது மகள் நித்யா ராவ் பெற்றுக்கொண்டார். கர்ப்பூரி தாக்கூருக்கான விருதை அவரது மகன் ராம் நாத் தாக்கூர் பெற்றுக்கொண்டார்.
இந்த விருது வழங்கும் விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கைய்யா நாயுடு, பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பிகார் முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.