முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் திடீரென இன்று சந்தித்துள்ளார். சேலத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது.
லோக்சபா தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் களம் உக்கிரமடைந்துள்ளது. இதற்கிடையே, திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு ராஜ்யசபா சீட் மட்டும் ஒதுக்கப்பட்டது. கமல்ஹாசன், திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தை நேற்று ஈரோட்டில் இருந்து தொடங்கினார் மநீம தலைவர் கமல்ஹாசன். ஈரோட்டில் நேற்று திமுக வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார் கமல். இதையடுத்து சேலத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கி இருந்தார் கமல்ஹாசன்.
இந்நிலையில், முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினும் சேலத்தில் தங்கியுள்ளார். நேற்று தருமபுரியில் பிரச்சாரம் செய்த முதல்வர் ஸ்டாலின், சேலம் பெத்தநாயக்கன் பாளையத்தில் இன்று மாலை நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் மாமாங்கம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியுள்ளார். தி.மு.க கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வரும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் முதலமைச்சர் ஸ்டாலின் தங்கியுள்ள அதே ஹோட்டலில் தான் தங்கி இருந்தார். இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, கமல்ஹாசன் இன்று காலை சந்தித்து பேசினார்.
நாடாளுமன்றத் தேர்தல் பணிகள், தேர்தல் பிரச்சார நிலவரம் பற்றி இருவரும் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக வேட்பாளர்களுக்கு மக்கள் ஆதரவு அதிகளவில் உள்ளதாக ஸ்டாலினிடம் கமல்ஹாசன் கூறியதாக கூறப்படுகிறது. பின்னர் கமல்ஹாசன் விமானத்தில் சென்னைக்கு புறப்பட்டு சென்றார். வரும் ஏப்ரல் 2ஆம் தேதி திருச்சியிலும், 3ஆம் தேதி சிதம்பரத்திலும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளார் கமல்ஹாசன். வரும் ஏப்ரல் 16ஆம் தேதி வரை திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.