ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்துவதற்கும், கச்சத் தீவை மீட்பதற்கும் மோடியால் மட்டும் தான் முடியும் என்று நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வைக்கும் பாஜக சார்பில் போட்டியிடும் ராதிகா சரத்குமார் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் நேற்று பாஜக வேட்பாளர் ராதிகா சாத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் தனது கணவர் சரத்குமாருடன் சேர்ந்து தாமரை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மேலும் பிரச்சாரத்திற்கு நடுவே பட்டாசு ஆலையில் வேலை முடித்து செல்லும் பட்டாசு தொழிலாளர்களின் பேருந்துக்குள் சென்று அவர்களுடன் ராதிகா சரத்குமார் கலந்துரையாடினார். அப்போது பேசிய ராதிகா சரத்குமார் பட்டாசு தொழிலை பாதுகாக்க போராடி வருகிறோம் என்றார்.
மேலும் பிரச்சாரத்தின் போது பொதுமக்களிடையே பேசிய பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார், நான் வேட்பாளராக போட்டியிடும் முதல் தேர்தல் இது ஆகும் என்றார். நிறைய அரசியல் பணிகளை இங்கிருந்து தான் செய்திருக்கிறோம் என்றார்.
மேலும் பேசிய ராதிகா சரத்குமார் என்னை பொருத்தவரை நம்பிக்கை, நேர்மை இது நான் சம்பாதித்த மிகப்பெரிய சொத்து என்றார். அதே மாதிரி அரசியலிலும் எனக்கு நேர்மை நாணயம் உண்மை இருக்க வேண்டும் என்றார்.
“இந்த ராதிகா சரத்குமார் உங்கள் சகோதரியாக அல்லது உங்க சித்தி ஆக கூட நினைத்து கொள்ளுங்கள் என்றார். நீங்கள் நினைக்கிற மாதிரி முன்பு மாதிரியான அரசியல் தற்போது இல்லை. அரசியலில் எல்லோரும் மாறி மாறி மக்களை ஏமாற்றி விட்டார்கள். நான் இந்த தொகுதியில் வெற்றி பெறும் பட்சத்தில் இங்கு உள்ள குறைகளை நிறைவேற்றுவேன். ஊழல் இல்லாத, நியாயமாக மக்களுக்காக சேவை செய்கிற கட்சி என்றால் அது பாஜக மட்டும் தான். கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவை நரேந்திர மோடி சிறப்பாக ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். தற்போது வரை ஊழல் இல்லாத ஆட்சியை கொடுத்து மக்கள் மனதில் நிரந்தரமாக இடம் பிடித்து இருக்கிறார் மோடி. தேசிய ஜனநாயக கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி. ஆனால் இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்று அவர்களுக்கே தெரியாது. தமிழகத்தில் 3வது அணியாக போட்டி யிடுகின்ற அதிமுக யாருகிட்ட போய் என்ன கேட்பார்கள் என்று அவர்களுக்கே தெரியாது. எனக்கு ஒரு வாய்ப்பினை அளித்து தாமரை சின்னத்தில் வாக்கு செலுத்த வேண்டும்” என்று கூறினார்.
பின்னர் பேசிய சரத்குமார் பேசும் போது பாஜகவின் 10 ஆண்டு கால ஆட்சி மீது குறை சொல்ல முடியாத காரணத்தினால் பிரதமரை தரைக்குறைவாக விமர்சிப்பதாக குற்றம் சாட்டினார்.
பிரதமர் பதவிக்கு என்று ஒரு மரியாதை இருக்கிறது. அதனை ஏளனம் செய்வதை பொறுத்துக் கொள்ள முடியாது. அப்பா முதல்வர் என்பதால் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக ஆக்கி உள்ளதாக தெரிவித்த சரத்குமார் பிரதமரை 29 பைசா என்று கூறும் உங்களை நாங்கள் முப்பதாயிரம் கோடி என்று கூறுவதா என கேள்வி எழுப்பினர்.
மேலும் பேசிய சரத்குமார் 1974 கச்சத்தீவை இந்திராகாந்தி தாரை வார்த்த போது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர் கருணாநிதி என்றார். அதேபோல் நம் நாட்டில் உள்ள ஒரு பகுதியை மற்ற நாட்டிற்கு கொடுக்க வேண்டும் என்றால் நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் அனுமதி வாங்க வேண்டும். ஆனால் அப்போதைய காங்கிரஸ் அரசு நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் அனுமதி பெறவில்லை என்றார்.
மேலும் பேசிய சரத்குமார் பத்து ஆண்டுகளாக கட்சதீவை ஏன் மீட்கவில்லை என பிரதமரை பார்த்து கேட்கும் திமுக கடந்த 10 ஆண்டுகளில் நீங்கள் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள் என சரத்குமார் கேள்வி எழுப்பினார். கட்சதீவை பற்றி பேசுவதற்கு திமுகவிற்கு அருகதை இல்லை என விமர்சனம் செய்தார்.
மேலும் தமிழகத்தில் மீனவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றால் அதற்கு முழு காரணம் திமுக ஆட்சி என்றார். மேலும் பேசிய சரத்குமார் ரஷ்யா உக்ரைன் போரை நிறுத்துவதற்கு தகுதியான ஒரு தலைவன் என்றால் அது இந்திய பிரதமர் நரேந்திர மோடி தான் என்றார். அதேபோல் கட்சத் தீவை மீட்டெடுக்க வேண்டும் என்று சொன்னால் அதுவும் மோடியால் மட்டும் தான் முடியும் என்றார்.