முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தோல்வி பயத்தில் உள்ளனர் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சோளிங்கர் அடுத்த பாண்டியநல்லூரில் அரக்கோணம் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.எல்.விஜயனை ஆதரித்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார். பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தோல்வி பயத்தில் உள்ளனர். நான் பேசுவதில் எது பொய் என்று கூறினால் பதில் சொல்லத் தயார். விமர்சனத்துக்கு அ.தி.மு.க. தொண்டன்கூட பயப்பட மாட்டான். மக்களை ஏமாற்றி தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. வாரிசு அரசியலுக்கு இந்த தேர்தலில் மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள். தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. நிறைவேற்றவில்லை.
உருட்டல், மிரட்டலுக்கு எல்லாம் அ.தி.மு.க. அஞ்சாது. அ.தி.மு.க.வினர் மீது பொய் வழக்குகள் போடுவது வாடிக்கையாகிவிட்டது. எங்கள் ஆட்சியின்போது தி.மு.க. மீது வழக்கு போடவில்லை; மக்கள் பணியாற்றினோம். தி.மு.க. அரசு எந்த திட்டங்களையும் கொண்டு வரவில்லை. திட்டங்களை கொண்டு வந்தால்தானே நாங்கள் குறை கூற முடியும். விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது.
மூன்று ஆண்டு கால ஆட்சியில் மக்களுக்கு செய்தது என்ன?. 3 லட்சம் கோடி ரூபாய் கடன் மட்டுமே அரசு வாங்கியுள்ளது. விஞ்ஞான ரீதியான யோசனைகளை பயன்படுத்தி விதவிதமான வாக்குறுதிகளை அளித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களை ஏமாற்றியுள்ளார். கிடைக்கும் நேரத்தில் மக்கள் பணியாற்றுங்கள்.
இந்தியாவிலேயே மக்களை சந்திக்காத ஒரே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான்; பொய் பேசுவதற்கு மு.க.ஸ்டாலினுக்கு நோபல் பரிசே வழங்கலாம்.
எடப்பாடி பழனிசாமி மோடியை எதிர்க்க மாட்டுக்கிறாரு.. அவரை கண்டால் பயப்படுகிறார் என்று முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார்.. என்னப்பா எதிர்க்கிறது.. நாங்களா ஆட்சியில் இருக்கிறோம். ஆட்சியில் இருக்கிறவர்கள் தானே எதிர்க்க வேண்டும். எதிர்க்கட்சியில் இருக்கிறவர்கள் போய் என்ன எதிர்க்க முடியும். ஸ்டாலினை போல் முதல்வராக இருந்துகொண்டு இருந்தால் தமிழ்நாட்டு மக்களுக்கு பாதிப்பு உண்டாக்கக்கூடிய எந்த திட்டமாவது தமிழகத்தில் அமல்படுத்த முற்பட்டால் யாராக இருந்தாலும் எதிர்த்து கண்டிப்பாக குரல் கொடுப்போம். உதாரணத்திற்கு காவிரி நதி நீர் பிரச்சினை. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துவிட்டது. அப்போது பாஜகவுடன் கூட்டணியில் இருந்தோம். ஆனால் உச்ச நீதிமன்றம் தீர்ப்பின் படி பாஜக அரசு நடக்கவில்லை. இதனால், உச்ச நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த மத்திய பாஜக அரசை எத்தனையோ முறை சொல்லி பார்த்தோம். அவர்கள் அமல்படுத்தப்படவிலை. இதற்காக 22 நாட்கள் நாடாளுமன்றத்தில் நாங்கள் குரல் கொடுத்தோம். நாடாளுமன்றத்தை ஒத்தி வைத்தோம். 22 நாட்கள் நாடாளுமன்றம் நடக்கவில்லை. இது அதிமுகவின் வலிமையை காட்டுகிறது. இதனால் மத்திய பாஜக அரசு பணிந்தது. உச்ச நீதிமன்றம் தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை ஆணையம் காவிரி நீர் முறைப்படுத்த குழு அமைக்கப்பட்டது. இது தாங்க அதிமுகவின் சாதனை.. பெண்களை மதிக்கின்ற கட்சி அதிமுக தான். பெண்களை இழிபு படுத்து பேசுகிற கட்சி தான் திமுக. மக்களை சந்திக்காத பொம்மை முதல்வர். தேர்தலின் போது தான் முதல்வர் ஸ்டாலின் டீக்கடையை பார்க்கிறார். கும்பகர்ணன் தூக்கத்தில் இருக்கும் முதல்வர் இனியாவது விழித்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.