கச்சத்தீவு இருந்தால் மட்டுமே தமிழக மீனவர்களின் பிரச்சினையை தீர்க்க முடியும்: அண்ணாமலை

“கச்சத்தீவு விவகாரத்தை நாங்கள் இப்போதுதான் தீவிரப்படுத்தியுள்ளோம். தமிழக பாஜகவின் அதிகாரபூர்வ நிலைப்பாடு கச்சத்தீவு நமக்கு வேண்டும் என்பதே” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது:-

கச்சத்தீவு விவகாரத்தை நாங்கள் இப்போதுதான் தீவிரப்படுத்தியுள்ளோம். தமிழக பாஜகவின் அதிகாரபூர்வ நிலைப்பாடு கச்சத்தீவு மீட்க வேண்டும் என்பதே. இந்தியாவிடம் இல்லாத நிலப்பரப்பு இல்லை. எனினும், கச்சத்தீவு எதற்காக வேண்டும் என்றால், கச்சத்தீவு இருந்தால் மட்டுமே தமிழக மீனவர்களின் பிரச்சினையை தீர்க்க முடியும்.

3 முறை இலங்கை சென்றுள்ளேன். தனிப்பட்ட முறையில் இலங்கை அதிகாரிகள், அரசியல் கட்சிகளை சந்தித்து பேசியுள்ளேன். இந்த சந்திப்புக்கு பிறகு கச்சத்தீவு பிரச்சினையில் தீர்வு கிடைக்க சில முடிவுகளுக்கு வந்துள்ளோம். மூன்று வாய்ப்புகளையும் யோசித்துள்ளோம். அது, கச்சத்தீவில் தினமும் பத்தாயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க லைசென்ஸ் பெறுவது அல்லது கச்சத்தீவை தமிழக மீனவர்கள் பயன்படுத்துவதற்கு அனுமதி பெறுவது அல்லது கச்சத்தீவை திரும்ப கேட்பது என்பதே அது. இதுதொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்துப் பேசியுள்ளோம். இதற்கு முன் கச்சத்தீவை பற்றி யார் பேசினார்கள். நாங்கள் தான் பேசுகிறோம். பாஜக முறைப்படி கச்சத்தீவு விவகாரத்தை கையாண்டு வருகிறது. சீமான் போல் நெய்தல் படையை அனுப்புவோம் என்று பேசவில்லை. நாங்கள் முறைப்படி தீர்வை நோக்கி பேசுகிறோம்.

நான் ஆர்டிஐ பெற்றதற்காக என் மேல் கோபம் ஏன் வருகிறது. இந்த 50 வருடத்தில் வேறு எந்த அரசியல்வாதியும் ஆர்டிஐ மூலம் தகவல் பெற்றிருக்கலாமே, ஏன் பெறவில்லை. கச்சத்தீவு விவகாரத்தில் வெளியிட்ட ஆர்டிஐ ஆவணம் பச்சை பொய் என்று சொல்பவர்கள் என்னுடன் விவாதிக்க தயாரா?. போலி என்றால் ஆர்டிஐ ஆவணங்களை நாங்கள் உருவாக்கினோமா. கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவின் பதில் தான் வேடிக்கையாக உள்ளது. கச்சத்தீவு நமக்கு வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு. அதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.

மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் இதைப்பற்றி இப்போது பேச ஆரம்பித்துள்ளார். எல்லாவிதமான தீர்வுகளுக்கும் முயற்சி எடுக்கிறோம் என்றுள்ளார் அவர். எனவே இந்த விவகாரத்தில் நிச்சயமாக தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

“தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை நான்தான் பாஜகவுக்குள் அனுப்பினேன். அவர் என்னுடைய ஸ்லீப்பர் செல். அவர் எனக்காக கட்சியில் வேலை பார்க்கிறார் என்பது மோடி புரிந்து கொண்டு பணியாற்ற வேண்டும்” என சீமான் மதுரையில் நேற்று முன் தினம் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேசியிருந்தார். இதற்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சீமான் அண்ணனுக்கு சின்னமும் இல்லை ஓட்டும் இல்லை. அதனால் அண்ணாமலை மீது சீமான் அண்ணன் உட்கார்ந்துவிட்டார். சீமானை பொருத்தமட்டில் இளைஞர்கள், பெண்கள், தாய்மார்கள் எந்த கட்சிக்கு வாக்களிக்க இருக்கிறார்கள் என்பது நன்றாகவே தெரியும். இன்று களத்தில் பாஜக தனித்து நிற்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணி தனித்து நிற்கிறது. பிரதமராக மீண்டும் மோடி வர போகிறார் என்பது மக்களுக்கு மிகவும் நன்றாக தெரியும். ஆதரவெல்லாம் தேசிய ஜனநாயக கூட்டணிக்குத்தான். சீமான் இப்படித்தான் பேசுவார். இதையெல்லாம் பெரியதாக கண்டுக் கொள்ளாதீர்கள் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.