‘இந்தத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், நாடு பற்றி எரியும்’ என்று மக்களை காங்கிரஸ் தலைவர்கள் மிரட்டி வருவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் கோட்புட்லியில் இன்று செவ்வாய்க்கிழமை நடந்த தேர்தல் பேரணி ஒன்றில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தன்னிறைவான பாரதம் என்ற கனவை நனைவாக்கவே இந்தத் தேர்தல். காங்கிரஸும் இண்டியா கூட்டணியும் நாட்டுக்காக இந்தத் தேர்தலில் நிற்கவில்லை. அவர்களின் சுய லாபத்துக்காகவே நிற்கிறார்கள். அவர்கள் ஊழலை காப்பாற்றுங்கள் என்கிறார்கள். நான் ஊழலை ஒழிக்க வேண்டும் என்று கூறுகிறேன்.
முதல் முறையாக காங்கிரஸ் தலைவர்கள் தேர்தலில் தாங்கள் வெற்றி பெறுவதைப் பற்றிப் பேசாமல், ‘பாஜக வெற்றி பெற்றால் நாடு தீ பற்றி எரிந்து விடும்’ என்று மக்களை மிரட்டுகிறார்கள். பாஜக ஒட்டுமொத்த நாட்டையே தனது குடும்பமாக பார்க்கிறது. காங்கிரஸ் கட்சியோ நாட்டை விட தனது குடும்பத்தையே பெரிதாக நினைக்கிறது.
காங்கிரஸ் கட்சி அந்நிய மண்ணில் நாட்டைப் பற்றி துஷ்பிரயோகமாக பேசும்போது, பாஜக நாட்டின் பெருமையை உயர்த்திப் பிடித்துள்ளது. மோடி உல்லாசம் அனுபவிக்க பிறக்கவில்லை. கடினமாக உழைக்கவே பிறந்துள்ளேன். நிறைய விஷயங்கள் நடந்திருக்க வேண்டும், என்றாலும் இந்தப் பத்து வருடங்கள் நடந்தது வெறும் ட்ரெய்லர்தான்.
சுதந்திரத்துக்குப் பின்னர் 60 ஆண்டுகள் நாட்டில் நிலவிய வறுமைக்கு காங்கிரஸ் கட்சியே காரணம். ஏனென்றால், காங்கிரஸ் கட்சியால் இந்தியா தொழில்நுட்பங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களுக்காக வெளிநாட்டை சார்ந்திருக்க வேண்டி இருந்தது.
நமது ஆயுதப் படையை தன்னிறைவு பெற்றதாக மாற காங்கிரஸ் கட்சி ஒருபோதும் அனுமதித்தது இல்லை. காங்கிரஸ் ஆட்சியில் இந்தியா பெரிய அளவில் ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடாக அறியப்பட்டிருந்தது. என்றபோதிலும் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர், தற்போது இந்தியா ஆயுதங்களை ஏற்றுமதி செய்து வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.