வைகோவின் மகனும், மதிமுக திருச்சி வேட்பாளருமான துரை வைகோவை திமுக அமைச்சர்கள் ராகிங் செய்கிறார்கள் என்று எதிர்க்கட்சியான அதிமுகவின் முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர் வேதனையுடன் கூறியுள்ளார்.
திமுகவுடன் மதிமுக கூட்டணியில் இருந்த நிலையில், அக்கட்சிக்கு திருச்சி நாடாளுமன்றத் தொகுதி ஒதுக்கப்பட்டது. அந்தத் தொகுதியின் வேட்பாளராக துரை வைகோ அறிவிக்கப்பட்டார். திமுக அமைச்சர் கே.என். நேருவின் கோட்டையாக திருச்சி உள்ள நிலையில், அவர் தனது மகன் அருண் நேருவுக்கு அந்த தொகுதியை கேட்டதாக தெரிகிறது. ஆனால், அவருக்கு பெரம்பலூர் தொகுதியை தந்துவிட்டு, துரை வைகோவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கே.என். நேரு சற்று அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இந்த சூழலில், கடந்த வாரம் திருச்சி தொகுதியில் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. அப்போது துரை வைகோவை திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு திமுக நிர்வாகிகள் சிலர் வெளிப்படையாக தெரிவித்தனர். இதையடுத்து பேசிய துரை வைகோ தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தார். கே.என். நேருவிடம் இருந்து தனக்கு ஒத்துழைப்பு வழங்கப்படாததை மறைமுகமாக மேடையில் சொன்ன துரை வைகோ, செத்தாலும் மதிமுகவுக்கு வழங்கப்படும் சின்னத்தில் தான் போட்டியிடுவேன் எனக் கூறி கண் கலங்கினார்.
ஆனால், அப்படி கண்ணீர்விட்டு துரை வைகோ பேசிய போது, அவரது அருகில் இருந்த அமைச்சர் கே.என். நேரு செல்போனில் ஏதோ ஒன்றை மும்முரமாக பார்த்துக் கொண்டிருந்தார். மேடையில் இருந்த மற்ற அமைச்சர்களும் துரை வைகோவின் அலட்சியம் செய்வதை போன்ற முகபாவனையை வைத்திருந்தனர். இதையடுத்து, சில தினங்களுக்கு பிறகு நடைபெற்ற பிரச்சாரத்தின் போது, துரை வைகோவை கடும் சொல்லாம் கே.என். நேரு திட்டுவதை போன்ற வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவியது.
இந்நிலையில், திருச்சி தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், அங்கிருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
துரை வைகோ நடுவில் அமர வைத்தது மூன்று அமைச்சர்கள் அவரை சூழ்ந்துகொண்டு ஏதோ ராகிங் செய்வதை போல செய்திருக்கிறார்கள். கல்லூரிகளில் முதலாமாண்டு வரும் புது மாணவர்களை சீனியர் மாணவர்கள் ராகிங் செய்வதை போல துரை வைகோவை அவர்கள் நடத்தியுள்ளனர். இது கூட்டணி தர்மமே அல்ல.
ஒரு இளம் தலைமுறை அரசியல்வாதி, ஒரு மூத்த தலைவரின் மகனை ராகிங் செய்திருக்கிறார்கள். அது நிச்சயமாக ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. கூட்டணி தர்மத்தின் படி அவருக்கு உரிய மரியாதையை திமுக கொடுத்திருக்க வேண்டும். அதை திமுக செய்யவில்லை என்பதுதான் எனது ஆதங்கம். இவ்வாறு விஜயபாஸ்கர் கூறினார்.