பிரதமர் மோடி ஒரு பைசா கூட ஊழல் செய்யவில்லை என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறினார்.
பெங்களூரு நாடாளுமன்ற தொகுதிகளுக்கான பா.ஜனதாவின் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு கூட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-
பிரதமர் மோடியின் சாதனைகளை வீடு, வீடாக சென்று மக்களுக்கு தெரிவிக்கும் பணிகளை நீங்கள் செய்ய வேண்டும். இதன் மூலம் கர்நாடகத்தில் 28 தொகுதிகளிலும் பா.ஜனதா கூட்டணியை வெற்றி பெற வைக்க வேண்டும்.
மோடி குஜராத் முதல்-மந்திரியாக இருந்தபோது அவருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கவில்லை. கடந்த 10 ஆண்டு கால ஆட்சியிலும் எந்த ஊழலும் நடைபெறவில்லை. இன்னொருபுறம் ரூ.12 லட்சம் கோடி ஊழல் புரிந்த கட்சிகள் இந்தியா கூட்டணியில் உள்ளன. 2ஜி அலைக்கற்றை ஊழல், அகஸ்டா ஹெலிகாப்டர் ஊழல், காஷ்மீர் ஊழல் செய்தவர்கள் இந்தியா கூட்டணியில் உள்ளனர்.
பிரதமர் மோடி ஒரு பைசா கூட ஊழல் செய்யவில்லை. நான் மோடியுடன் 40 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். மோடி 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி அதிகாரத்தில் உள்ளார். அவர் ஒரு நாள் கூட விடுமுறை எடுத்தது இல்லை. ஆனால் ராகுல் காந்தி கோடை வந்ததும் ஓய்வுக்காக வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்கிறார். ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் உள்பட அனைத்து தரப்பினருக்கும் திட்டங்களை பிரதமர் மோடி செயல்படுத்தியுள்ளார்.
நாட்டில் ஜனநாயகத்திற்கு ஒன்றும் ஆகவில்லை. ஊழல்வாதிகளை காப்பாற்றவே இந்தியா கூட்டணியை எதிர்க்கட்சிகள் அமைத்துள்ளன. ஊழல்வாதிகளை சிறையில் தள்ளியுள்ளோம். வரும் காலத்திலும் ஊழல்வாதிகளை சிறைக்கு அனுப்புவோம். இவ்வாறு அவர் பேசினார்.