வயநாடு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி, தனது தொகுதி மக்களை வெறும் வாக்காளர்களாக பார்க்காமல், தனது குடும்ப உறுப்பினராகவே கருதுவதாக கூறினார்.
மக்களவைத் தேர்தலில் கேரளாவின் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். அதற்காக அவர் இன்று புதன்கிழமை வயநாட்டில் வேட்புமனு தாக்கல் செய்தார். அதற்கு முன்பு ஒரு ரோடு ஷோ ஒன்றில் ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது அவருடன் பிரியங்கா காந்தி உடனிருந்தார். பேரணியின்போது கூடியிருந்த மக்களிடம் பேசிய ராகுல் காந்தி கூறியதாவது:-
உங்களின் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பது எனக்கு கிடைத்த கவுரவமாக நினைக்கிறேன். உங்களை நான் வெறும் வாக்காளர்களாக கருதவில்லை. எனது சகோதரி பிரியங்காவை எப்படி நினைக்கிறேனோ, நடத்துகிறனோ அதைப் போலவேதான் உங்கள் அனைவரையும் கருதுகிறேன், நடத்துகிறேன். வயநாட்டின் வீடுகளில் எனக்கு சகோதரிகள், தாய்மார்கள், தந்தைகள், சகோதரர்கள் உள்ளனர். இதற்காக எனது இதயத்தின் அடியாழத்தில் இருந்து நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இங்கு மனித – விலங்கு மோதல், மருத்துவக் கல்லூரி பிரச்சினை இருக்கிறது. அதற்கான போராட்டத்தில் நான் வயநாடு மக்களுடன் துணை நிற்கிறேன். மருத்துவக் கல்லூரி பிரச்சினையில் அரசுக்கு நாங்கள் அழுத்தம் கொடுக்க முயன்றோம். அது தொடர்பாக முதல்வருக்கு நான் கடிதம் எழுதினேன். துரதிருஷ்டவசமாக அவர்கள் எந்த முன்னெடுப்பையும் மேற்கொள்ளவில்லை. மத்தியிலும், கேரளாவிலும் காங்கிரஸ் ஆட்சி அமையும்போது இந்த இரண்டு பிரச்சினைகள் சரியாகும், இவற்றுக்குத் தீர்வு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். நான் இங்கு அரசியல் பேசவில்லை. கட்சிகள், சமூகம், வயது போன்றவற்றைக் கடந்து வயநாட்டில் உள்ள ஒவ்வொருவாரும், எனக்கு அன்பும், ஆதரவும், மரியாதையும் தந்து என்னை அவர்களின் சகோதரனாக நடத்தியுள்ளனர். இவ்வாறு ராகுல் பேசினார்.
இந்த ரோடு ஷோவின்போது பிரியங்காவுடன், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், கேரளா சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் மற்றும் மாநில காங்கிரஸ் கட்சின் செயல் தலைவர் எம்.ஹசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதே தொகுதியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் ஆனி ராஜாவும் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அக்கட்சி கேரளாவில் ஆட்சி நடத்திவரும் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியில் அங்கம் வகிக்கிறது. இந்திய அளவில் எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகளும், காங்கிரஸும் அங்கம் வகித்து வருகின்றன. எனினும், கேரளாவில் இரு தரப்புமே வலுவான வேட்பாளர்களுடன் எதிரெதிர் அணியாக களம் காண்பது குறிப்பிடத்தக்கது.