பிரதமர் மோடியின் குடும்பம் என்பது அமலாக்கத் துறை, வருமான வரித் துறை, சிபிஐதான்: மு.க.ஸ்டாலின்!

பிரதமர் மோடியின் குடும்பம் என்பது அமலாக்கத் துறை, வருமான வரித் துறை, சிபிஐதான் என முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பாஜகவில் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர்களில் 25 பேரில் 20 பேர் மீதான ஊழல் வழக்குகள் நிறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் 3 பேரின் வழக்குகள் மொத்தமாகவே முடித்து வைக்கப்பட்டன. இதைத்தான் மோடியின் கட்சி வாஷிங் மெஷின் கட்சி என்கிறார்கள். ஊழல்வாதியாக உள்ளவர்கள் கூட பாஜகவில் சேர்ந்தால் புனிதர்கள் ஆகிவிடுகிறார்கள் என காங்கிரஸ் கடுமையான விமர்சனத்தை முன் வைக்கிறது. அந்த வகையில் முதல்வர் ஸ்டாலினும் ஒரு விமர்சனத்தை முன் வைத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

பா.ஜ.க.வின் ‘வாஷிங் மெஷின்’ பாணியை ஆதாரப்பூர்வமாகத் தோலுரித்துள்ளது @IndianExpress நாளேடு! பா.ஜ.க.வுக்குத் தாவிய எதிர்க்கட்சித் தலைவர்கள் 25 பேரில், 20 பேர் மீதான ஊழல் வழக்குகளில் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், 3 பேர் மீதான வழக்குகள் மொத்தமாக முடித்தே வைக்கப்பட்டு விட்டன. 10 ஆண்டு பா.ஜ.க. ஆட்சி என்பது இந்தியாவின் உயர் விசாரணை அமைப்புகளை எவ்வளவு இழிவான நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்பதற்கு இதைவிடச் சான்று வேண்டுமா? “பேச நா இரண்டுடையாய் போற்றி” எனப் பேரறிஞர் அண்ணா அன்று சொன்னது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ.. ஊழல்வாதிகளை எல்லாம் கட்சியில் இணைத்து உத்தமர்களாக்கிவிட்டு, ஊழலை ஒழிப்போம் எனக் கூசாமல் புளுகும் பிரதமருக்கு நன்றாகவே பொருந்துகிறது! மோடியின் குடும்பம் என்பது ‘E.D – I.T. – C.B.I.’தான்! இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.