தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 19 ம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பச்சை துரோகம் செய்யாமல் அனைவரும் ஓட்டளிக்க வேண்டும் என நடிகர் விஜய் சேதுபதி கைக்கூப்பி வீடியோ வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் 39 லோக்சபா தொகுதிகள் உள்ளன. புதுச்சேரியில் ஒரு லோக்சபா தொகுதி உள்ளது. இந்த 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, சீமானின் நாம் தமிழர் இடையே நான்கு முனை போட்டி நிலவி வருகிறது. தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் முடிந்துவிட்டது. தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளில் மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தல் தேதி நெருங்கி வரும் சூழலில் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் தமிழ்நாட்டில் தீவிர பிரசாரத்தை தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில் தான் வரும் லோக்சபா தேர்தலில் வாக்களிப்பது தொடர்பாக நடிகர் விஜய் சேதுபதி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் நடிகர் விஜய் சேதுபதி கைக்கூப்பி தனது பேச்சை தொடங்கி உள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளதாவது:-
அன்பார்ந்த வாக்காளர் பெருமக்களே.. எப்படி இருக்கீங்க.. நாம் எல்லோரும் ஆசையாக எதிர்பார்த்து காத்திருந்த தேர்தல் வந்துவிட்டது. வழக்கமாக தேர்தல் வரும்போது எல்லோருக்கும் ஒரு மனநிலை இருக்கும். அதாவது யார் வந்தா நமக்கென்ன.. இல்லை யார் காசு கொடுக்கிறாங்களோ அவங்களுக்கு ஓட்டு போடுவோம்.. இல்லாவிட்டால் ஓட்டு போட்டு ஒன்றும் ஆகப் போறதில்லை போன்ற இத்தகைய மனநிலையை தூக்கி ஓரம் வைச்சிடுங்க. நாம, நமக்காக இல்லாவிட்டாலும் கூட நம்ம குழந்தைகளோட எதிர்காலத்திற்கும், நம்ம அடுத்த தலைமுறையோட எதிர்காலத்திற்கும் நிச்சயமா ஓட்டு போட வேண்டும்.
காசு வாங்கிட்டு ஓட்டு போடுவது, காசு வாங்கிவிட்டு ஓட்டை விற்பது எவ்ளோ பெரிய துரோகமோ, அதை விட பச்சை துரோகம் ஓட்டு போடாமல் இருப்பது. உங்களுக்கு புடிச்சவங்க, புடிக்காதவங்க யாராக இருந்தாலும் சரி, அவுங்க யார் என்னன்னு தெரிந்து கொள்ளுங்கள். அவங்களால நமக்கு என்ன பயன் என்பதை விட இந்த நாட்டிற்கு என்ன பயன் என்பதை யோசித்து பாருங்க. அதில் நம்முடைய சுயநலமும் இருக்கு. நாமெல்லாம் சேர்ந்தது தானே நாடு. நாம என்பது இன்றைக்கும் மட்டும் பார்ப்பதா, அல்லது நாளைக்கு நம்முடைய குழந்தைகள் வாழப்போகிற எதிர்காலத்தை பற்றியும் சிந்திக்கிறதா. நம்முடைய குழந்தைகளுடைய எதிர்காலம் ரொம்ப முக்கியம். நம்மை ஆளப்போவது யார். ஆட்சியை யார்கிட்ட கொடுக்கப் போறோம். அவர்களுக்கு என்ன தகுதி இருக்கு? இதுக்கு முன்னாடி அவர்கள் என்ன செஞ்சிருக்காங்க? என்ன சொல்றாங்க? என்பதை அலசி ஆராஞ்சி ஓட்டு போடுங்க.
இதுவரை அரசியல் செய்திகளை கேட்கவில்லை என்றாலும் பேசவில்லைன்றாலும் பரவாயில்லை. இன்றையிலிருந்து தேர்தலில் ஓட்டு போடுகிற நாள் வரை அரசியல் பற்றி பேசுங்க. தேர்தல் செய்திகளை பகிர்ந்து கொள்ளுங்கள். அதுபற்றிய விவாதத்தை வைத்து கொள்ளுங்கள். ஓட்டுப்போடும் தினத்தில் தெளிவா, சிந்தித்து உங்களுக்கு சரின்னு படுறவங்களுக்கு விரலில் மை வைத்து வாக்களியுங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.