மலையாள நடிகையான நவ்யா நாயர், ஆன்லைனில் புடவை விற்றதன் மூலம் கிடைத்த பணத்தை காந்தி பவன் சிறப்பு பள்ளிக்கு நன்கொடை வழங்கியுள்ளார்.
மலையாள நடிகையான நவ்யா நாயர், தமிழில், அழகிய தீயே, ராமன் தேடிய சீதை, ஆடும் கூத்து, மாயக்கண்ணாடி உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இப்போது மலையாளத்தில் மற்றும் கன்னட மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் தனது சமூக வலைதளப்பக்கத்தில், தான் ஒரு முறை அணிந்த மற்றும் புதிதாக வாங்கி அணிய முடியாத புடவைகளை ஆன்லைனில் விற்பனை செய்வதாக அண்மையில் தெரிவித்திருந்தார். மேலும் கைத்தறி, காஞ்சிபுரம், பனாரஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான புடவைகள் இருப்பதாகவும் நியாயமான விலையில் அவை கிடைக்குமெனவும் கூறியிருந்தார். இது விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டது. ரசிகர்கள் பல கேள்விகளை எழுப்பியிருந்தனர்.
இந்நிலையில் இதன் மூலம் கிடைத்த பணத்தை பத்தனாபுரத்தில் உள்ள காந்திபவனுக்கு அவர் நன்கொடையாக கொடுத்துள்ளார். அங்கு வசிப்பவர்களுக்கு புதிய ஆடைகள் மற்றும் பயனுள்ள பொருட்களை வாங்கிக் கொடுத்துள்ளார். மேலும் காந்தி பவன் சிறப்பு பள்ளிக்கு ரூ.1 லட்சம் நன்கொடையையும் அவர் வழங்கியுள்ளார்.இவரது செயல் தற்போது பாராட்டை பெற்று வருகிறது.