மோடி நன்றாக வடை சுடுவார். அவர் சுடுகின்ற வடையை கூட நமக்கு தர மாட்டார்: உதயநிதி!

மோடி நன்றாக வடை சுடுவார். அவர் சுடுகின்ற வடையை கூட நமக்கு தர மாட்டார். அவரே சாப்பிட்டு விடுவார். அவருக்கு தமிழ்நாட்டு மக்கள் வைத்துள்ள செல்ல பெயர் 29 பைசா என்று அமைச்சர் உதயநிதி கூறினார்.

கரூரில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணியை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது கூறியதாவது:-

மோடி நன்றாக வடை சுடுவார். அவர் சுடுகின்ற வடையை கூட நமக்கு தர மாட்டார். அவரே சாப்பிட்டு விடுவார். அவருக்கு தமிழ்நாட்டு மக்கள் வைத்துள்ள செல்ல பெயர் 29 பைசா. நாம் வரியாக ஒரு ரூபாய் கட்டுகிறோம். அவர் மத்திய அரசு நமக்கு தருவது 29 பைசா மட்டுமே. பீகார் மாநிலத்திற்கு ஒரு ரூபாய்க்கு ஏழு ரூபாய் வழங்கப்படுகிறது. உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஒரு ரூபாய் நிதி கொடுத்தால், அவர்களுக்கு மூன்று ரூபாய் வழங்கப்படுகிறது. நமக்கு வெறும் 29 பைசா மட்டுமே வழங்கப்படுகிறது.

10 வருடமாக நமது இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கிற பிரதமர் மோடி தேர்தல் நேரத்தில் மட்டும் தமிழ்நாட்டிற்கு வருகிறார். பாஜக ஆளும் மாநிலங்களில் ஆரம்பிக்கப்பட்ட அனைத்து எய்ம்ஸ் மருத்துவமனைகளும் செயல்பாட்டிற்கு வந்து விட்டன. ஆனால், தமிழகத்தில் இன்னும் வரவில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக வைக்கப்பட்ட ஒரே செங்கல் வைத்த ஒரு செங்கலையும் நான் எடுத்துக் கொண்டு வந்து விட்டேன். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலம் தகுதி படைத்த மகளிருக்கு ரூபாய் 1000 வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி கொடுக்கப்பட்டது போன்று இன்று ஒரு கோடியே 16 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டு வருகிறது. சில பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படாமல் இருக்கிறது. சிலருக்கு மகளிர் உரிமை தொகை கிடைப்பதில் சிக்கல் இருப்பது உண்மை தான். இன்னும் ஐந்து ஆறு மாதங்களில் குறைகள் சரி செய்யப்பட்டு தகுதியுள்ள ஒரு கோடியே 60 லட்சம் மகளிருக்கும் கண்டிப்பாக வழங்கப்படும். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

இதில் அமைச்சர் உதயநிதி கரூரில் செந்தில் பாலாஜி ஆதரவு பெற்ற வேட்பாளர் ஜோதிமணி என்று கூறிய போது செந்தில் பாலாஜி என்ற வார்த்தையை கேட்டதும் அங்கே இருந்த நிர்வாகிகள் ஆர்ப்பரிக்க தொடங்கினர். உதயநிதி பேசுவதற்கு கூட இடம் தராமல் விடாமல் கைதட்டி செந்தில் பாலாஜி பெயரை பாராட்டும் விதமாக மரியாதை செய்தனர். 2-3 நிமிடங்கள் விடாமல் கைதட்டி உதயநிதி ஸ்டாலின் வியக்கும் விதமாக கோஷம் எழுப்பினர். செந்தில் பாலாஜி சிறை சென்று கிட்டத்தட்ட 1 வருடம் ஆக உள்ள நிலையிலும் கூட அவருக்கான மவுசு இன்னும் கரூரில் உச்சத்திலேயே உள்ளது.