நாட்டை உருவாக்குவோர், அழிப்போர் இடையிலான வேறுபாட்டை உணர்வீர்: ராகுல் காந்தி

“நாடு மிகவும் முக்கியமான கட்டத்தில் உள்ளது. நாட்டைக் கட்டி எழுப்புகிறவர்களுக்கும், அழிப்பவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை வாக்காளர்கள் அடையாளம் கண்டு அங்கீகரிக்க வேண்டும்” என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

இது குறித்து ராகுல் காந்தி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-

நாடு மிகவும் முக்கியமான கட்டத்தில் வந்து நிற்கிறது. நாட்டின் ஒவ்வொரு பிரிவினரும் நாட்டை கட்டி எழுப்புவர்களுக்கும், அதனை அழிப்பவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து அங்கீகரிக்க வேண்டும். காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி என்றால், இளைஞர்களுக்கான வேலை உறுதி, விவசாயிகளுக்கான எம்எஸ்பி உத்தரவாதம், ஒவ்வொரு ஏழைப் பெண்ணும் கோடிஸ்வரர், 100 நாள் வேலைக்கு நாளொன்றுக்கு ரூ.400 கூலி, சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் அரசியலமைப்பு மற்றும் மக்களின் உரிமைகளுக்கான பாதுகாப்பு என்று பொருள்.

பாஜக என்பது வேலைவாய்ப்பின்மை உறுதி, விவசாயிகள் மீது கடன் சுமை, பெண்களுக்கான உரிமை – பாதுகாப்பு இல்லாமை, தொழிலாளர்களுக்கு ஆதரவின்மை, ஒடுக்கப்பட்டவர்கள் மீதான சுரண்டல் மற்றும் பாகுபாடு, சர்வாதிகாரம் மற்றும் போலி ஜனநாயகம் என்று பொருள். உங்களின் எதிர்காலம் உங்களின் கைகளில் உள்ளது. சிந்தித்து, உணர்ந்து சரியான முடிவெடுங்கள். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.