கேரளா மாநிலம் கண்ணூரில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

கேரளாவில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் 2 பேர் படுகாயமடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

கேரளா மாநிலம் கண்ணூரில் இன்று அதிகாலை பயங்கர சத்தத்துடன் வெடி குண்டு வெடித்திருக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். சில நாட்களுக்கு முன்னர்தான் கர்நாடக தலைநகர் பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கஃபேயில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்திருந்தது. இது பெரும் பீதியை கிளப்பியிருந்த நிலையில், கண்ணூரிலும் வெடி குண்டு வெடித்தது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், “கண்ணூரின் பனூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட முளியத்தோட்டில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இதில் இரண்டுபேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். முதற்கட்ட விசாரணையில் இவர்கள் சிபிஎம் உறுப்பினர்கள் என்பது தெரிய வந்திருக்கிறது. இருவரில் ஒருவருக்கு மிக மோசமான அளவில் காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இந்த விபத்து அதிகாலை ஒரு மணியளவில் நடந்திருக்கிறது. விபத்திற்கான காரணம், என்ன? என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகிறோம்” என்று கூறியுள்ளனர்.

இந்நிலையில் காயமடைந்த இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கேரளாவில் பாஜக இல்லையென்றாலும், அதன் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் தீவிரமாக இயங்கி வருகிறது. இதனால் அடிக்கடி சிபிஎம் ஊழியர்களுக்கும், ஆர்எஸ்எஸ் ஊழியர்களுக்கும் இடையில் மோதல்கள் நடக்கும். இந்த மோதல்கள் உச்சகட்டத்தைத எட்டும்போது உயிரிழப்புகளும் ஏற்படும். அந்த வகையில் இன்று காலை ஏற்பட்ட வெடி விபத்து இரு தரப்பு மோதலினால் ஏற்பட்டதா? அல்லது வெடிகுண்டு தயாரிக்கும் போது தவறுதலாக விபத்து ஏற்பட்டு குண்டு வெடித்திருக்கிறதா? என்கிற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.