மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் சென்னை, கோவை, ஈரோடு, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
2024 மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தமிழகத்தில் நடைபெறவுள்ளது. தேர்தலை ஒட்டி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடப்பதை தவிர்க்கும் வகையில், வருமான வரித் துறை கட்டுப்பாட்டு அறைகளை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் சென்னை உட்பட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய பணம் பதுக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின்படி இந்தச் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக அரசின் 8 முன்னணி ஒப்பந்ததாரர்களின் வீடுகள் மற்றும் அவர்கள் தொடர்புடைய இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, குடிநீர் வழங்கல் வாரியம் மற்றும் மாநகராட்சி ஒப்பந்ததாரர்களின் வீடுகள் மற்றும் அவர்கள் தொடர்புடைய இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை, கோவை, ஈரோடு, சேலம் மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள பைனான்சியர் தங்கவேலுவின் வீட்டில் சுமார் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் அவரது வீடுகள் நேரடி கண்காணிப்பில் இருப்பதால், அரசு ஒப்பந்தாரர்களின் மூலம் பணப்பட்டுவாடா நடக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், தேர்தலையொட்டி தமிழகம் முழுவதுமே வருமான வரித் துறையினர் ஆங்காங்கே தயார் நிலையில் இருப்பதாகவும், சென்னையில் உள்ள தலைமை கட்டுப்பாட்டு அறைக்கு வரக்கூடிய தகவலின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட குழுவினரை புகார் கூறப்படும் இடங்களுக்கு அனுப்பி, சோதனை நடத்துவதற்கான பணிகளில் வருமான வரித் துறை ஈடுபட்டு வருகிறது.