“இந்த இயக்கத்துக்கு யார் துரோகம் செய்தாலும், இப்போது ஒருவர் இருக்கிறாரே, அவருக்கு கிடைத்த பரிசுதான் கிடைக்கும். இந்த இயக்கம் தெய்வ சக்தி உள்ள இயக்கம்” என்று ஈரோட்டில் நடந்த பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
மக்களவைத் தேர்தலில் திருப்பூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அருணாச்சலத்தை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். ஈரோடு மாவட்டம் கவுந்தம்பாடியில் நடந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
அதிமுகவை வீழ்த்த, திமுக தலைவர் எத்தனையோ அவதாரங்களை எடுத்துவிட்டார். திமுக எடுத்த அத்தனை அவதாரங்களையும் மக்களின் துணையோடு தவிடுபொடியாக்கிய கட்சி அதிமுக. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு கட்சியில் எத்தனை பிரச்சினைகள் ஏற்பட்டது, என்பதை அனைவரும் அறிவர். இந்த இயக்கத்தை அழிக்க இன்றைய முதல்வர் ஸ்டாலின் போட்ட திட்டங்கள் அத்தனையும், மக்களின் துணையோடு தூள் தூளாக்கப்பட்டது. அந்த நேரத்தில், ஆளுநரின் உத்தரவின்பேரில், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். பேரவைத் தலைவர் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆணையிட்டார். அதன்படி அதற்கான வாக்கெடுப்பு நடந்தபோது, என்னென்ன கூத்து நடந்தது என்பது அனைவரும் அறிவர்.
அன்று அதிமுகவுக்கு எதிராக வாக்களித்தவர்கள் யார் என்பதும் தெரியும். அன்றைய தினமே, எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆத்மா ஒருவருக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று எண்ணியது. அந்த தண்டனை இன்றைக்கு கொடுக்கபப்டடு விட்டது. இந்த இயக்கத்துக்கு யார் துரோகம் செய்தாலும், இப்போது ஒருவர் இருக்கிறாரே, அவருக்கு கிடைத்த பரிசுதான் கிடைக்கும். இந்த இயக்கம் தெய்வ சக்தி உள்ள இயக்கம். தெய்வ சக்தி உள்ள தலைவர்கள் தோற்றுவித்து, கட்டிக்காத்த இயக்கம். இந்த இயக்கத்துக்கு யார் துரோகம் செய்தாலும் அவர்கள் தானாக அழிந்து போவார்கள். அதிமுகவை எத்தனையோ முறை திமுக உடைக்க, ஒடுக்க, முடக்க நினைத்தது. மக்களின் துணை அத்தனையும் தவிடு பொடியாக்கியது. ஆளும் திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்து மூன்றாண்டு காலம் ஆகிவிட்டது. மக்களுக்கு என்ன நலத்திட்டங்களை செய்தனர், என்று மக்கள் கேட்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.