“நாட்டையும் ஜனநாயகத்தையும் பிரதமர் மோடி சிதைக்கிறார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் அச்சுறுத்தப்பட்டு பாஜகவில் இணைய வைக்கப்படுகின்றனர்” என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சோனியா காந்தி காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக ஜெய்ப்பூரில் இன்று (சனிக்கிழமை) நடந்த பேரணியில் பேசிய சோனியா காந்தி கூறியதாவது:-
இந்த நாட்டையும், அதன் ஜனநாயகத்தையும் பிரதமர் மோடி சிதைக்கிறார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் அச்சுறுத்தப்பட்டு, பாஜகவில் இணைய வைக்கப்படுகின்றனர் இன்று நம் நாடும், நம் நாட்டின் ஜனநாயகமும் ஆபத்தில் இருக்கிறது. ஜனநாயக அமைப்புகளும் சிதைக்கப்படுகின்றன. நம் அரசியல் சாசனத்தை மாற்ற சதி செய்யப்படுகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் இந்த அரசாங்கம் வேலையின்மையை அதிகரிக்க, பணவீக்கத்தை அதிகரிக்க, சமத்துவமின்மையை அதிகரிக்க, அடக்குமுறைகளை அதிகரிக்க எந்த வாய்ப்பையும் தவறவிட்டதில்லை. மோடி அரசு நமக்குச் செய்தவை அனைத்து நம் கண் முன்னால் நிற்கின்றன. தன்னை மிகப் பெரியவர் என நினைத்துக் கொள்ளும் மோடி, தேசத்தின் மாண்பையும், ஜனநாயகத்தையும் சிதைத்து வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.