பட்டியல் இனத்தவர்களுக்கு தனித் தொகுதி ஒதுக்கீடு இருப்பது போல் மகளிருக்கும் தனி ஒதுக்கீடு இருக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் சந்தோஷ் குமாரை ஆதரித்து காஞ்சிபுரம், திருப்போரூர் பேருந்து நிலையங்கள் அருகே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:-
நாங்கள் தேர்தலில் 50 சதவீதம் மகளிருக்கு ஒதுக்கீடு அளிக்கிறோம். ஆனால் அவர்கள் மற்ற கட்சி ஆண் வேட்பாளர்களிடையே போட்டி போட வேண்டிய நிலை உள்ளது. பட்டியலினத்தவர்களுக்கு தனி ஒதுக்கீடு இருப்பது போல் மகளிருக்கும் ஒதுக்கீடு இருக்க வேண்டும். அப்போது தான் மகளிர் போட்டியிட்டு அவர்களுக்குள் திறமையானவர்கள் மக்களவை உறுப்பினராகவோ, சட்டப் பேரவை உறுப்பினராகவோ வர முடியும். சீமானுக்கு வாக்களித்தால் ஜெயிப்பாரா என்று கேட்காதீர்கள். முதலில் வாக்களியுங்கள். நாங்கள் ஜெயிக்கிறோம். படித்த பட்டதாரிகளை வேட்பாளர்களாக நிறுத்தி உள்ளேன். அவர்கள் மூலம் இந்த பாழடைந்த சமூகத்தை தகர்த்து புதிய சமுதாயத்தை படைப்போம்.
நாங்கள் வெள்ளை அடிக்க வந்தவர்கள் அல்ல. அந்த கட்டிடத்தையே தகர்த்து விட்டு புதிய கட்டிடத்தை கட்ட வந்தவர்கள். இந்த நாட்டின் இயற்கை வளத்தை பாதுகாக்க, உங்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் உடனே வந்து நிற்க நாம் தமிழர்தான் முன் வருவார்கள். உங்களை கண் போல காத்து நிற்போம். இவ்வாறு அவர் பேசினார்.