அரசியல் கட்சி தூண்டுதலால் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடந்தது: எடப்பாடி பழனிசாமி!

சில அரசியல் கட்சிகளின் தூண்டுதலின்பேரால் தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்ததாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலையொட்டி திருவள்ளூரில் பிரசார பொதுக்கூட்ட மேடையில் பேசிய எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

திமுக அறிவித்த வாக்குறுதிகளில் 90 சதவிகிதம் நிறைவேற்றப்பட்டதாக பச்சைப் பொய் கூறுகிறார் மு.க. ஸ்டாலின். ஓட்டு அளித்த மக்களுக்கு திமுக என்ன செய்தது. வேளாண்மை, தொழிற்சாலைகள் அமைந்த பகுதி திருவள்ளூர். நெல் குவிண்டாலுக்கு ரூ.2 ஆயிரம், கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரமாக கொடுக்கப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால் இதுவரை செய்யப்படவில்லை. 100 நாள் வேலைத்திட்டத்தில் ஊதியம் சரியாக வருவதில்லை. வேலையும் முழுதாகத் தருவதில்லை.

அம்மா இருசக்கர வாகனத் திட்டம், தாலிக்குத் தங்கம் திட்டம், விலையில்லா ஆடு, மாடுகள் வழங்கும் திட்டம், கிராமம் முதல் நகரம் வரை அம்மா மினி கிளினிக் திறக்கப்பட்டது, இவை அனைத்தையும் திமுக அரசு நிறுத்திவிட்டது. பெட்ரோல் விலை உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

நீட் தேர்வு குறித்த ரகசியத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது வெளியிடுவார். திமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆன நிலையில் இன்னும் ரகசியத்தை உதயநிதி சொல்லவில்லை. திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து குறித்துதான் என உதயநிதி சொன்னார். ஆனால் இதுவரை செய்யவில்லை. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது திமுக அவர்களுடன் கூட்டணியில் இருந்தது. அப்போது 14 ஆண்டுகளாக தமிழகத்துக்கு திமுக என்ன செய்தது. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

முன்னதாக அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளப் பதிவில் கூறியுள்ளதாவது:-

ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளில் செய்யாததையா இப்போது நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததும் செய்யப் போகிறார்கள்? நான் மேடைதோறும் சொல்வது போல “ஒருவரை ஏமாற்ற வேண்டுமென்றால் அவரது ஆசையைத் தூண்ட வேண்டும்” என்ற சதுரங்க வேட்டை பாணியை தனது கொள்கையாக வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலினின் தொடர் நாடகத்திற்கு அறிவார்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியப் பெருமக்கள் மயங்க மாட்டார்கள். இதற்கான தக்க பாடத்தை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் புகட்டுவார்கள்.

பல்வேறு வாக்குறுதிகளை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அளித்து ஆட்சிக்கு வந்த ஸ்டாலின், 3 ஆண்டுகள் ஆன நிலையில் ஒரு வாக்குறுதியைக் கூட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களுக்கும், போக்குவரத்து ஊழியர்களுக்கும் நிறைவேற்றவில்லை. மாறாக திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்திய மருத்துவ சங்க நிர்வாகிகள், செவிலியர் சங்க நிர்வாகிகள், ஆசிரியர் சங்க நிர்வாகிகள், அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள், போக்குவரத்துக் கழக நிர்வாகிகள் என்று பலரை பணியிட மாற்றம் செய்தும், போராடியவர்களை கைது செய்தும் தனது கோர முகத்தை காட்டியது திமுக அரசு. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த தவறியதோடு, ஒவ்வொரு அகவிலைப்படி உயர்வினையும் பலமுறை 6 மாத கால தாமதமாக அறிவித்து பணப்பயன் இல்லாமல் வழங்கியது இந்த திமுக அரசு.

இந்தநிலையில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் தமிழ்நாட்டின் நிதிநிலை சீராகும் என்ற ஸ்டாலினின் அறிவிப்பு அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என்ற சொல்லாடலை நினைவுபடுத்தும் வெறும் வாய்ச்சொல்லில் வீரனடி என்பதை அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் நன்கறிவார்கள். அதிமுக அரசு இந்தியா அளவில், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக புதிய சம்பள உயர்வை அமல்படுத்திய முதல் மாநிலம் என்பதோடு, ஒவ்வொரு முறையும் மத்திய அரசு அறிவிக்கும் அகவிலைப்படி உயர்வை முன்தேதியிட்டு, பணப்பயனுடன் வழங்கியது என்பதை இங்கு நினைவுகூற கடமைப்பட்டுள்ளேன். எனவே அதிமுக, அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றும் என்றும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழர்களின் ஒருமித்த குரலாக, தமிழ்நாட்டு உரிமைகளை காத்திட எங்கள் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டுகிறேன்.

தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், தபால் வாக்களிக்கும் முன்பு இந்த திமுக ஆட்சியாளர்களின் பசப்பு வார்த்தைகளை ஒரு கணம் எண்ணிப்பார்த்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்று அன்போடு வேண்டுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.