திமுகவுக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டிருக்கும் நிலையில், அவரை மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதிக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் அனைத்து தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. எனவே பரப்புரைகள் சூடுபிடித்து வருகின்றன. பாஜகவை பொறுத்த அளவில், 19 இடங்களிலும், பாமக 10, தமாகா 3, அமமுக 2, ஓபிஎஸ், தேவநாதன், ஜான்பாண்டியன், பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம் ஆகியோர் தலா ஒரு இடங்களிலும் போட்டியிடுகின்றனர். இதில் ஓபிஎஸ் தனி சின்னத்திலும், தேவநாதன், ஜான் பாண்டியன், பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம் ஆகியோர் தாமரை சின்னத்திலும் போட்டியிடுகின்றனர்.
அதேபோல திமுக 21 தொகுதிகளில் நேரடியாக களம் காண்கிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் தனித்து களம் இறங்கிய கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த முறை திமுக கூட்டணியில் இணைந்திருக்கிறது. எனவே, கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்காக கமல்ஹாசன் தீவிரமாக பரப்புரையை மேற்கொண்டிருக்கிறார். வடசென்னையில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த அவர், இந்தியாவின் தலைநகர், ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகம் அமைந்திருக்கும் நாக்பூருக்கு மாற்றப்படும் என்று அச்சம் தெரிவித்திருந்தார்.
இது குறித்து கோவை லோக்சபா தொகுதி வேட்பாளரும், பாஜக மாநில தலைவருமான அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர், “கமல்ஹாசனை மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதிக்க வேண்டும். இந்தியாவின் தலைநகரை எப்படி நாக்பூருக்கு மாற்ற முடியும்? இப்படி கூறிய கமல்ஹாசனை மனநல மருத்துவமனையில் அனுமதித்து அவரது மூளையை பரிசோதிக்க வேண்டும். அவர் உண்மையில் நன்றாகத்தான் இருக்கிறாரா? அவரது இடது, வலது மூளை சரியாக செயல்படுகிறதா? சுயநினைவோடுதான் இருக்கிறாரா? சரியாக சாப்பிடுகிறாரா? என பரிசோதிக்க வேண்டும். அவர் மட்டுமல்ல இப்படி கூறுபவர்கள் அனைவரையும் பரிசோதிக்க வேண்டும். அவர் உண்மையாகவே ஆரோக்கியமான கருத்துக்களைதான் பேசுகிறாரா? அல்லது ஒரு ராஜ்யசபா சீட்டுக்காக தனது கட்சியை திமுகவிடம் அடகு வைத்துவிட்டு இப்படி கூவுகிறாரா என்பதை அவர்தான் விளக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் மணிப்பூருக்கு போகாமல் தமிழகத்திற்கு அடிக்கடி வருகிறாரே என முதலமைச்சர் விமர்சித்துள்ளாரே? என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, “ஏன் திமுக கதறுகிறார்கள். தன்னுடைய நாட்டில் உள்ள தமிழகத்திற்கு பிரதமர் வருகிறார். இதனால் திமுகவுக்கு ஏன் பயம்? இதே முதலமைச்சர் கையில் கிளவுஸ் போட்டுக்கொண்டு காரில் வந்து, மாவட்ட தலைநகரில் தங்கி பேசுகிறாரே, ஏன் முதலமைச்சர் கிராமங்களுக்கு செல்லவில்லை? இதுவரை எத்தனை கிராமங்களுக்கு அவர் சென்றிருக்கிறார்? முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் எத்தனை கிராமங்களில் அவர் இரவு தங்கியிருக்கிறார்?” எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.