மக்களவைத் தேர்தலையொட்டி விசிக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று காலை (மார்ச் 9) அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டபட்டினத்தில் வெளியிட்டார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையை இன்று அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், சிதம்பரம் அருகே ஜெயங்கொண்டபட்டினத்தில் வெளியிட்டார். இந்த தேர்தல் அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பெற்றுக் கொண்டார். விசிக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய வாக்குறுதிகள்:
* ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்
* உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட வேண்டும்
* ஆளுநர் பதவியை ஒழிக்க வேண்டும்
* தமிழ்நாட்டின் பல்கலைக் கழகங்களின் வேந்தர்களாக ஆளுநர்கள் பதவி வகிப்பதை மாற்ற வேண்டும்
* உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்.
* தமிழ்நாட்டுக்கான தனி கொடியை அனுமதிக்க வேண்டும்
* ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்
* எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு என தனியாக வங்கி உருவாக்க வேண்டும்
* அம்பேத்கர் பிறந்த நாளை அறிவுத் திருநாளாக அங்கீகரிக்க வேண்டும்
* தேர்தல் ஆணையர்கள் நியமன திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும்.
* வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு பதில் வாக்குச் சீட்டு முறையை கொண்டு வர வேண்டும்
* வகுப்புவாத, பிரிவினையை தூண்டும் சட்ட திருத்தங்கள் நீக்கப்பட வேண்டும்
* அனைத்து மொழிகளிலும் அம்பேத்கர் நூல்கள் மொழிபெயர்ப்பு
* ராமர் கோவில் கட்டியதில் நடந்த ஊழல் முறைகேடு தொடர்பாக விசாரணை.
* இந்தியா முழுவதும் தமிழ்ச் செம்மொழி வாரம் கொண்டாடப்பட வேண்டும்.
* 65 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு ஓய்வு ஊதியம் வழங்கும் திட்டம்.
* ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை ரத்து.
* இந்தியாவின் இரண்டாவது தலைநகராக சென்னையை உருவாக்குதல்.
* ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம்.
* புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து மாநிலங்களுக்கு உரிய நிதிப் பகிர்வு அளிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகள் விசிக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்களை விளக்கிப் பேசிய திருமாவளவன் கூறியதாவது:-
பாஜகவுக்கு எதிரான திமுகவின் முயற்சிக்கு விசிக துணை நிற்கும். பாஜக அரசை வீழ்த்துவது தான் ஒன்றை இலக்கு. தேசிய மனித உழைப்பு நேரம் – மதிப்புக் கொள்கையை வலியுறுத்துவோம். வறுமைக் கோட்டுக்கான உச்சவரம்பினை உயர்த்துவோம். 100 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டத்தை 200 நாட்களுக்கு விரிவுபடுத்துவோம். ஜிஎஸ்டி-யை ஒழிக்க குரல் கொடுப்போம். மத்திய அரசில் விவசாயத்துக்கு தனி பட்ஜெட் போன்ற அனைவருக்கான நலனை முன்னிறுத்தும் திட்டங்களே விசிக தேர்தல் அறிக்கையின் முக்கியத்துவம். நான் முதன்முதலாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது பிற்படுத்தப்பட்டோரின் உச்ச வரம்பினை உயர்த்த குரல்கொடுத்து அதனை மாற்ற வைத்தேன். அகில இந்திய மருத்துவ இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோரின் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய குரல் கொடுத்தேன். இவ்வாறு அவர் கூறினார்.