“டாஸ்மாக் கடையை மூடிட்டா அரசுக்கு வருமானம் குறைஞ்சு போயிருமேனு இவங்க பயப்படல. தமிழ்நாட்டில் எல்லா ஆட்சியாளர்களும் மதுபானத் தொழிற்சாலையை நடத்திட்டு இருக்கான். நீ கள்ளுக்கடைக்கு போயிட்டேனா அவனுக்கு துட்டு வராதுனு தான் பயப்படுறான்” என்று சீமான் கூறினார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பிரச்சாரங்கள் அனல் கக்கி வருகின்றன. அந்த வகையில், நாம் தமிழர் கட்சியின் ஈரோடு வேட்பாளருக்கு ஆதரவாக சீமான் நேற்று வாக்கு சேகரித்தார். அப்போது சீமான் பேசியதாவது:-
கேரளாவில் இருக்கு.. ஆந்திராவில் இருக்கு.. கர்நாடகாவில் இருக்கு.. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் அது இல்லை. அது என்னனு தெரியுமா? கள் பானம் தான். கள் பானம் ஏன் தமிழ்நாட்டில் இல்லை? யாராவது பதில் சொல்ல முடியுமா? ஏனென்றால் கள்ளு கடை வந்துருச்சுனா நீ டாஸ்மாக் கடைக்கு போறகு குறைஞ்சிடும். அப்போ என்ன பண்ணனும்? கள்ளை மதுபானம் என்று குற்றம்சாட்ட வேண்டும். அதை தான் இப்போ பண்ணிட்டு இருக்காங்க.
டாஸ்மாக் விற்பனை குறைந்தால் என்ன பிரச்சினைனு நீ கேட்கலாம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆட்சியாளர்களுக்கும் மதுபானத் தொழிற்சாலை இருக்கிறது. அந்த தொழிற்சாலைகளில் இருந்துதான் டாஸ்மாக் கடைகளுக்கு சரக்கு போயிட்டு இருக்கு. இப்போ தெரியுதா? இதுவரை நீ ஓட்டு போட்டு தேர்வு செய்த எல்லோருமே சாராய முதலாளிகள் தான். நீ முதலமைச்சரை தேர்ந்தெடுக்கல. சாராய முதலாளிகளை தான் தேர்ந்தெடுத்துட்டு இருக்கிறாய். அதுக்கு தான் தமிழ்நாட்டுக்குள்ள கள்ளுக்கடையை அவன் விடவே மாட்றான்.
ஆனால், மது பாட்டிலில் என்ன எழுதி இருப்பானு தெரியும்ல. மது நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கு கேடு. நாட்டுக்கும், உயிருக்கும் கேடான ஒன்றை ஒரு நாடே விக்குறத வேற எங்கேயாவது பாத்திருக்கியா? தமிழ்நாட்டுல மட்டும்தான் இந்தக் கொடுமை நடந்துட்டு இருக்கு. டாஸ்மாக் கடைகளை மூடிட்டா, அரசுக்கு வருமானம் போயிருமேனு யாரும் பயப்படல. தான் நடத்திட்டு வர்ற மதுபானத் தொழிற்சாலைக்கு வருமானம் போயிருமேனு தான் பயப்படுறான். இவ்வாறு சீமான் பேசினார்.