திண்டுக்கல் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் முபாரக்கை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது தேர்தல் பத்திரம் குறித்து பேச ஸ்டாலினுக்கு என்ன தகுதி இருக்கிறது? என்று கூறினார்.
நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழகத்தில் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.இதையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் திண்டுக்கல் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் முகமது முபாரக்கை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் செல்லும் இடங்களில் என்னை பற்றி மட்டுமே பேசுகிறாரே தவிர, தாங்கள் எல்லாம் என்ன செய்தோம் என்று சொல்ல மறுக்கிறார். சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும். அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலின், எடப்பாடிக்குச் சென்று நான் பிரதமருடன் சிரித்துப் பேசும் புகைப்படத்தை காட்டுகிறார். சிரிப்பது தவறா?அவர் விரக்தியின் விளிம்பில் இருக்கிறார். அதனால்தான் இப்படியெல்லாம் பேசிக் கொண்டு இருக்கிறார். வெளியில் வீரவசனம். ஆனால் மோடியை நேரில் பார்த்தால் சரணாகதி. இதுதான் தி.மு.க.வின் நிலைப்பாடு.
தேர்தல் பத்திரம் குறித்து பேச ஸ்டாலினுக்கு என்ன தகுதி இருக்கிறது? திமுகவுக்கு ரூ.650 கோடி தேர்தல் நிதி வந்திருக்கிறது. பாஜகவுக்கு ரூ.6000 கோடி வந்துள்ளது. ஆனால் அவர்களுக்கு அவ்வளவு வந்துள்ளது, நமக்கு அவ்வளவு தொகை வரவில்லையே என்பதால்தான் ஸ்டாலின் அதுகுறித்து இவ்வளவு பேசுகிறார். அதிமுக கூட்டணி தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும்.திமுக ஆட்சியில் விலைவாசி 40% உயர்ந்துள்ளது. ஸ்டாலின் எத்தனை பொய்மூட்டைகளை அவிழ்த்துவிட்டாலும் மக்கள் நம்பத் தயாராக இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.