துருக்கி (Turkey) நாட்டின் பெயர் அதிகாரப்பூர்வமாக துர்க்கியே (Turkiye) என மாற்ற ஐநா ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு ஐரோப்பா நாடுகளில் ஒன்று துருக்கி. இது மேற்கு ஆசியாவை தாண்டி கிரீஸ், பல்கேரியாவுடன் வடமேற்காக எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது. ஐரோப்பா கண்டத்தில் இருந்தாலும் கூட துருக்கி ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கவில்லை. இந்த நாட்டின் அதிபராக ரெசப் தாயிப் எர்டோகன் உள்ளார். இந்நிலையில் ‛துருக்கி’ (Turkey) எனும் தங்கள் நாட்டின் பெயரை ‛துர்க்கியே’ (Turkiye) என மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. நாடு முழுவதும் இக்கோரிக்கை வலுத்த நிலையில் நாட்டின் பெயரை ‛துருக்கி’யில் இருந்து ‛துர்க்கியே’ என மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக அங்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து ‛துருக்கி’யை அந்நாட்டு மக்கள் ‛துர்க்கியே’ என அழைக்க தொடங்கினர்.
இந்த பெயர் மாற்றம் தொடர்பாக துருக்கி அதிபர் தயிப் எர்டோகன் சார்பில் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் ஐநாவுக்கு ஒப்புதல் கோரி கடிதம் அனுப்பியது. பெயர் மாற்றம் தொடர்பான அனைத்து விபரங்களும் அடங்கிய நிலையில் இந்த கடிதம் கடந்த ஆண்டு டிசம்பரில் ஐநாவுக்கு அனுப்பப்பட்டது. அதன்பிறகு கடந்த 5 மாதங்களாக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாமல் நிலுவையில் இருந்தது. இந்நிலையில் துருக்கி நாட்டின் பெயரை துர்க்கியே என பெயர் மாற்றுவதற்கு அதிகாரப்பூர்வமாக ஐநா ஒப்புதல் வழங்கி உள்ளது. இதனை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் ஆண்டானியா குட்ரெஸ் உறுதி செய்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛துருக்கி நாட்டின் பெயர் மாற்றத்துக்கு ஐக்கிய நாடுகள் சபை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன்மூலம் இப்போது இருந்தே துருக்கி என்பது துர்க்கியே என்ற பெயரில் அழைக்கப்படும்” என்றார்.
துருக்கி (Turkey) என்பது ஆங்கிலத்தில் வான்கோழி என பொருள்படும். அதோடு மோசமான தோல்வி, முட்டாள் என்பதையும் இந்த வார்த்தை குறிக்குமாம். இது துருக்கி நாட்டு மக்களுக்கு கவலையை கொடுத்தது. மேலும், கூகுள் உள்பட தேடுதளத்தில் Turkey என டைப் செய்து படங்கள் தேடினால் அதில் வான்கோழியின் உருவங்கள் மட்டுமே வருகின்றன. இதனால் துருக்கி நாட்டின் பெருமை வெளியுலகிற்கு தெரியாமல் மறைந்து போவதாக அந்நாட்டு அரசாங்கம் கருதியது. இதனால் Turkey எனும் பெயரை Turkiye என மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது.‛துர்க்கியே’ என்ற வார்த்தையானது கலாசாரம், நாகரீகம் உள்ளிட்ட மதிப்புகளை பிரதிபலிப்பதாகவும், துருக்கி நாட்டின் மொழியின் உச்சரிப்போடு ஒன்றி இருப்பதாகவும் அந்நாட்டு அரசு நினைத்தது. இதனால் தான் துருக்கியே என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஐநா சார்பில் துருக்கியே என்பதற்கு தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டாலும் கூட துருக்கி தனது நாட்டை இதற்கு முன்பே துர்க்கியே என அழைக்க தொடங்கியது. இதனால் சமீபகாலமாக நாட்டின் தயாரிக்கும் பொருட்களில் ‛made in turkiye’ என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு கோப்புகளிலும் துர்க்கியே என குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் தான் நாட்டின் பெயர் அதிகாரப்பூர்வமாக துர்க்கியே என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.