டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த பாஜக சதி: அதிஷி

“டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த பாஜக முயற்சித்து வருகிறது” என்று டெல்லி அமைச்சர் அதிஷி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அதிஷி கூறியதாவது:-

கெஜ்ரிவால் போலி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்க்க சதி நடந்து வருகிறது என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் என்னிடம் கூறுகின்றன. எனவே தான் எந்த ஆதாரமும் இல்லாமல் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த காலங்களில் நடந்த சில சம்பவங்களை யோசித்துப் பார்க்கும்போது சதி நடந்து கொண்டிருக்கிறது என்பது தெளிவாகிறது.

டெல்லியில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளின் பணியிடங்கள் பல்வேறு துறைகளில் காலியாக இருந்தும் பல மாதங்களாக அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை. டெல்லிக்குள் அதிகாரிகள் இடமாற்றமும் இல்லை. தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து அதிகாரிகள் கூட்டங்களில் கலந்து கொள்வதை நிறுத்திவிட்டனர். கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர் பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பதும் அவர்களின் சதியின் ஒரு பகுதியே. இவ்வாறு அவர் கூறினார்.

ஆம் ஆத்மியின் இந்த குற்றச்சாட்டுகளை பாஜக மறுத்துள்ளது. இதுதொடர்பாக பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் ஹரிஷ் குரானா, “ஆம் ஆத்மி தினம் தினம் புதிய கதைகளை சொல்லி வருகிறது. ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் செப்டம்பர் முதல் கவர்னரை முதல்வர் சந்திக்கவில்லை என்பது அவர்களுக்குத் தெரியுமா” என்று வினவியுள்ளார்.