ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370-ஐ திரும்பக் கொண்டு வருவோம் என சொல்ல காங்கிரஸ் தயாரா என பிரதமர் மோடி சவால் விடுத்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி கூறியதாவது:-
இந்தத் தேர்தல் வெறும் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் மட்டுமல்ல; நாட்டில் பலமான அரசாங்கத்தை அமைப்பதற்கான தேர்தலாகும். அரசு பலமாக இருக்கும்போது, சவால்களை சவாலுக்கு உட்படுத்தி பணிகளை முடிக்க முடியும். என்னை நம்புங்கள், 60 ஆண்டுகால பிரச்சினைகளை தீர்த்து வைப்பேன் என்று கூறியிருந்தேன். இங்குள்ள தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு நான் மரியாதை அளித்தேன். இரண்டு வேளை உணவுக்காக ஏழைகள் கவலைப்பட வேண்டியதில்லை என்று நான் உத்தரவாதம் அளித்தேன். இன்று ஜம்மு காஷ்மீரின் லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு இலவச ரேஷன் உத்தரவாதம் உள்ளது. மோடியின் உத்தரவாதம் என்பது நிறைவேற்றுவதற்கான உத்தரவாதம்.
காங்கிரஸின் பலவீனமான அரசாங்கங்கள் ஷாபுர்கண்டி அணையை பல தசாப்தங்களாக முடக்கி வைத்தது உங்களுக்கு நினைவிருக்கும். ஜம்மு விவசாயிகளின் வயல்கள் காய்ந்து, கிராமங்கள் இருளில் மூழ்கின. அதேநேரத்தில், நமது ராவி ஆற்றின் தண்ணீர் பாகிஸ்தானுக்குப் போய்க்கொண்டிருந்தது. அந்த தண்ணீரை ஜம்மு விவசாயிகளுக்கு வழங்குவதற்கான உத்தரவாதத்தையும் நிறைவேற்றி இருக்கிறேன்.
காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி, பிடிபி மற்றும் அனைத்து கட்சிகளும் ஜம்மு காஷ்மீரை பழைய காலத்துக்கு கொண்டு செல்ல விரும்புகின்றன. ஜம்மு காஷ்மீருக்கு இந்த குடும்பங்கள் நடத்தும் கட்சிகள் செய்த அளவுக்கு சேதத்தை யாரும் ஏற்படுத்தவில்லை. இங்கு அரசியல் கட்சி என்பது குடும்பம், குடும்பம் மற்றும் குடும்பத்துக்கானது.
அதிகாரத்துக்காக ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 எனும் சுவரைக் கட்டிவிட்டார்கள். உங்கள் ஆசியோடு நான் அந்த சுவரை இடித்து, அந்தச் சுவரின் குப்பைகளையும் மண்ணில் புதைத்துவிட்டேன். இந்தியாவில் உள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எந்த ஒரு அரசியல் கட்சியாவது 370-வது சட்டப்பிரிவை மீண்டும் கொண்டு வருவோம் என்று சொல்லத் தயாரா? ஒருவேளை அவர்கள் அவ்வாறு சொன்னால் நாடு அவர்களை திரும்பிக் கூட பார்க்காது.
நான் முன்னோக்கி சிந்திக்கிறேன். அப்படியென்றால் இதுவரை நடந்தது வெறும் டிரெய்லர்தான். புதிய மற்றும் அற்புதமான ஜம்மு காஷ்மீரை உருவாக்குவதற்கான பணி என் முன் இருக்கிறது. ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடக்கும் காலம் தொலைவில் இல்லை. ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும். உங்கள் கனவுகளை உங்கள் எம்.எல்.ஏ மற்றும் உங்கள் அமைச்சர்களுடன் நீங்கள் பகிர்ந்து கொள்ள முடியும்.
ராமர் கோயில் என்பது பாஜகவுக்கு தேர்தல் பிரச்சினை என்று காங்கிரஸ் கூறுகிறது. ராமர் கோயில் ஒருபோதும் தேர்தல் பிரச்சினையாக இருந்ததில்லை. அது ஒரு தேர்தல் பிரச்சினையாக மாறாது. பாஜக பிறப்பதற்கு முன்பே ராமர் கோவில் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. அந்நிய படையெடுப்பாளர்கள் நமது கோயில்களை அழித்த போது, இந்திய மக்கள் தங்கள் கோயில்களைக் காப்பாற்ற போராடினார்கள். காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பெரிய பங்களாக்களில் வசித்து வந்தனர். ஆனால் கூடாரத்தில் இருந்த குழந்தை ராமருக்கு பிரம்மாண்ட ஆலயம் அமைக்க முயன்ற போது அதனை அவர்கள் எதிர்த்தார்கள்.
நாட்டின் பெரும்பான்மையான மக்களின் உணர்வுகளைப் பற்றி காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி கவலைப்படுவதில்லை. மக்களின் உணர்வுகளுடன் விளையாடி மகிழ்கிறார்கள். நீதிமன்றத்தால் தண்டனை பெற்று ஜாமீனில் இருக்கும் ஒருவர், குற்றவாளி ஒருவரின் வீட்டுக்குச் சென்று, சாவன் மாதத்தில் ஆட்டிறைச்சி சமைத்து மகிழ்ந்து, நாட்டு மக்களைக் கிண்டல் செய்ய வீடியோ எடுக்கிறார்கள். யாரும் எதையும் சாப்பிடுவதை சட்டம் தடுக்கவில்லை. ஆனால் இவர்களின் எண்ணம் வேறு. நமது நாட்டின் மீது தாக்குதல் நடத்திய முகலாயர்களுக்கு, நமது கோயில்களை இடிக்கும் வரை திருப்தி ஏற்படவில்லை. முகலாயர்களைப் போலவே சாவன் மாதத்தில் வீடியோவைக் காட்டி நாட்டு மக்களைக் கிண்டல் செய்ய நினைக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.