பாஜக ஆட்சிக்கு வந்தால் கிடா வெட்டு வழிபாடுக்கு தடை போடுவாங்க: கார்த்தி சிதம்பரம்

நான் சொன்னது போலவே பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக கிடாவெட்டி, சேவலை நேர்த்திக்கடனாக கொடுப்பதை தடை செய்வார்கள் என சிவகங்கை தொகுதி எம்பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.

சிவகங்கையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்தியா கூட்டணி சார்பில் லோக்சபா தொடர்பாக தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் கார்த்தி சிதம்பரம் பேசியதாவது:-

வரும் தேர்தல், லோக்சபா வேட்பாளரை மட்டும் தேர்ந்தெடுக்கும் எலெக்சன் அல்ல. நமது கலாசாரத்தை பாதுகாக்க வேண்டிய தேர்தல். மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால், கிடா வெட்டி சாமி கும்பிட தடை போடுவார்கள். நமது பழக்கவழக்கங்களுக்கு தடை போட்டுவிட்டு, சமஸ்கிருதம், மேல்தட்டு முறைகளில்தான் வழிபாடு நடத்த வேண்டும் என சொல்வார்கள். கடந்த 10 வருடத்தில் நம்முடைய வருமானம் கூடாமல், செலவு அதிகரித்துள்ளது. இதுதான் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியின் அவலநிலை. இந்தியாவில் உள்ள 140 கோடி பேரும் வரி கட்டுகின்றனர். இந்தியாவில் வரி கட்டாத ஆட்களே கிடையாது. ஆனால், தமிழக மக்கள் கட்டும் வரி பணம், வடமாநிலத்தில் செலவு செய்யப்படுகிறது. இந்த நிலை மாறனும். தமிழகத்திற்கு அதிக நிதி கிடைக்க வேண்டும் என்றால் மத்தியில் ஆட்சி மாற்றம் வர வேண்டும். நமது நாட்டில் தற்போது மாநிலத்தின் முதல்வர்களை கைதுசெய்து பயமுறுத்துகின்ற அசாதாரண சூழல் நிலவுகிறது. தமிழக அரசிற்கு பாதுகாப்பு வேண்டும் என்றால், அதனை சார்ந்துள்ள அரசு (காங்கிரஸ் அரசு) மத்தியில் அமைய வேண்டும். தமிழக அரசின் 4 முத்தான திட்டங்கள் தொடர வேண்டும் என்றால், கை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு கார்த்தி ப சிதம்பரம் பேசியிருந்தார்.

இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு காஷ்மீரில் நடந்த பிரச்சாரத்தில் பேசுகையில், புனிதமான சாவன் மாதத்தில் ஆட்டிறைச்சியை சமைத்து சாப்பிட்டு, பெரும்பான்மை மக்களின் உணர்வுகளை எதிர்க்கட்சியினர் புண்படுத்துகின்றனர்” என்று கூறியிருந்தார். இதனை சுட்டிக்காட்டி ட்வீட் போட்டிருக்கும் சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி ப சிதம்பரம், நான் சொன்னது போலவே.. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக கிடாவெட்டி, சேவலை நேர்த்திக்கடனாக கொடுப்பதை தடை செய்வார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

பாஜக வட இந்திய மேல்சாதி சமஸ்கிருத சைவ “இந்துத்துவா” என்று பிரச்சாரம் செய்கிறது, இது கிராமப்புற தென்னிந்திய நம்பிக்கை நடைமுறையில் இருந்து மிகவும் வேறுபட்டது என்றும் கார்த்தி சிதம்பரம் ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.