அமெரிக்காவின் சாண்டியாகோ மாகாணத்தில் ரோந்து காரில் மோதிய 13 வயது சிறுவனை போலீசார் சுட்டுக்கொன்றனர்.
சாண்டியாகோவில் உள்ள வார்கோல்ட் பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த கார் ஒன்று காணாமல் போனது. இது தொடர்பாக காரின் உரிமையாளர் போலீசாரிடம் புகாரளித்தனர். உடனே கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்துக்கு சென்ற போலீசார் அங்கு தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து சந்தேகத்திற்கு உரிய நபர்களின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக சாண்டியாகோ போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்குரிய வகையில் வந்த கார் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த போலீசின் ரோந்து வாகனத்தின் மீது மோதியது. இதனை கண்ட போலீசார் அவர்களை தடுத்து நிறுத்த முயன்றனர். காரை ஒட்டி வந்தவர்கள் போலீசார் தங்களை விரட்டி வருவதை கண்டு வேகமாக திருப்பிச்சென்று தப்ப முயன்றனர். இதனால் போலீசார் காரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அதில் காரை ஒட்டி வந்தவர் உயிரிழந்தார். மேலும் இருவர் காயங்கள் இன்றி தப்பினர்.
உடனடியாக காரின் அருகே சென்று கதவை திறந்தபோதுதான் காரில் இருந்தவர்கள் 3 பேரும் சிறுவர்கள் என்று தெரியவந்தது. போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சிறுவனின் வயது 13 மட்டுமே. இதுகுறித்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் சிறுவன் ஓட்டி வந்த கார் வால்கோல்ட் பகுதியில் திருடப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. இதில் கொல்லப்பட்ட சிறுவனின் பெயரை போலீசார் இதுவரை வெளியிடவில்லை. போலீஸ் வாகனம் மீது வேண்டுமென்றே சிறுவர்கள் காரை மோதியதாகவும், அவர்களுக்கு அங்கு மேலும் சில போலீசார்கள் நிற்பது தெரியாது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.