அதிமுக, திமுக எம்.பி.க்களால் ஒரு பயனும் இல்லை: ராமதாஸ்!

தேர்தல் களத்தில் வெற்றி பெற, அனைத்தையும்விட அவசிய தேவை கோடிகள்தான் என்பது தமிழகத்தில் கடந்த சில பத்தாண்டுகளாக எழுதப்படாத தத்துவமாக இருந்தது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ், தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தேர்தல் களத்தில் வெற்றி பெற, அனைத்தையும்விட அவசிய தேவை கோடிகள்தான் என்பது தமிழகத்தில் கடந்த சில பத்தாண்டுகளாக எழுதப்படாத தத்துவமாக இருந்தது. தமிழகத்தில் நாம் ஆண்ட கட்சியும் இல்லை. ஆளும் கட்சியும் இல்லை. அதனால் நம்மிடம் கோடிகளும் இல்லை. நம்மிடம் இருப்பவை எல்லாம் கொடிகளும், கொள்கைகளும்தான்.

இவற்றை வைத்துக்கொண்டு இவர்களால் என்ன செய்ய முடியும் என்ற ஏளன பார்வையுடன்தான் தமிழகத்தின் இரு கூட்டணிகளும் தேர்தல் களத்தில் நுழைந்தன. ஆனால், சிங்கத்தின் குகையில் சிறு நரிகளால் என்ன செய்துவிட முடியும் என்பதைப்போல, நமது உழைப்புக்கு ஈடுகொடுக்க முடியாமல், தொலைதூரத்துக்கு பின்னால் அக்கட்சிகள் துவண்டு கிடக்கின்றன. நீயோ வெற்றிக் கோட்டை நெருங்கிவிட்டாய்.

மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் 37 பேரும், 2019-ல் திமுக கூட்டணி சார்பில் 38 பேரும் வெற்றி பெற்று டெல்லிக்கு சென்றனர். ஆனால், அவர்கள் ஆறாவது விரலாகத்தான் இருந்தனர். அவர்களை தேர்வு செய்த தொகுதிகளின் மக்களுக்கோ, தமிழகத்துக்கோ எந்தவித பயனும் ஏற்படவில்லை. தற்போது, பாமக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வெற்றிக் கனியை பரிசாக வழங்க மக்கள் தயாராக உள்ளனர். அதேநேரம், அந்த கனியை பறிக்க நமது உழைப்பும் மிகவும் அவசியம். நீ காட்டிய உழைப்பை இன்னும் ஒருவாரத்துக்கு கொடு. வெற்றி நம்வசமாகிவிடும். ஏப்ரல் 19 உன் உழைப்பை எடைபோடும் நாளாகவும், ஜூன் 4 அந்த உழைப்பின் பயனை கொண்டாடும் நாளாகவும் அமைய வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.