பிரதமர் மோடி தனக்கு பதிலாக ஓ பன்னீர் செல்வத்தை ராமநாதபுரத்தில் களமிறக்கியுள்ளார். ஓ பன்னீர் செல்வம் மீது மோடி தனிப்பட்ட அன்பு வைத்துள்ளார் என்று ராமநாதபுரத்தில் பிரசாரம் மேற்கொண்ட அண்ணாமலை பேசினார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று ராமநாதபுரத்தில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தை ஆதரித்து வாக்கு சேகரித்தார். பாஜக கூட்டணியில் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடும் ஓ பன்னீர்செல்வத்துக்கு ஓட்டு கேட்டு அண்ணாமலை பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நீங்க எல்லாரும் என்ன கேட்டீங்க.. மோடி ராமநாதபுரத்தில் போட்டியிட வேண்டும் என்று விரும்புனீர்கள்.. ஆனால் நாம் இங்கு புரிந்துகொள்ள வேண்டும். மோடிக்கு பதிலாக அண்ணன் ஓ பன்னீர் செல்வம் இங்கு போட்டியிடுகிறார். இதனால், மோடி ராமநாதபுரத்தில் நின்றால் எப்படி வெற்றி பெற செய்வோமோ அதேபோல் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஓ பன்னீர் செல்வத்தை வெற்றி பெற செய்ய வேண்டும். மோடிக்கு ராமநாதபுரம் தொகுதி மீது தனி பிரியம் இருப்பதனால் தான், தமிழ்நாட்டில் இரண்டே இரண்டு மாவட்டத்தை மட்டும் தனி தொகுதியாக மோடி தேர்வு செய்தார். அந்த 2 மாவட்டம் உங்களுக்கு தெரியும். அதில் ஒன்று தான் ராமநாதபுரம். மோடியே, நேரடியாக ராமநாதபுரத்தை தங்கள் கண்காணிப்பில் வைத்துள்ளார். நமது பிரதமர் மோடியிடம் உலக தலைவர்களே எப்போ போன் பண்ணி பேசலாம் என்று ஏங்கிக்கொண்டு இருக்கிறார்கள். அமெரிக்க ஜனாதிபதி ஏங்கிக்கொண்டு இருக்கிறார். ஆனால் இன்றைக்கு தொலைபேசியை எடுத்து மோடியிடம் எந்த நேரத்திலும் பேசக்கூடியவர் என்றால் உங்கள் வருங்கால எம்பி ஓ பன்னீர் செல்வம் தான். ஓ பன்னீர் செல்வம் எப்போது வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் மோடியிடம் பேசலாம். அவர்கள் இருவருக்கும் அப்படிப்பட்ட அன்பு உள்ளது. மோடி, ஓ பன்னீர் செல்வம் மீது அவ்வளவு அன்பு வைத்துள்ளார். அரசியலை தாண்டி அப்பேற்பட்ட அன்பு. இதனால் ஓ பன்னீர் செல்வத்தை தோற்கடிக்க விடக்கூடாது.
தமிழ்நாட்டில் 2 அரசியல் துரோகம் நடந்துள்ளது. அன்று கலைஞர் கருணாநிதி எப்படி எம்ஜிஆரை வெளியே அனுப்பினாரோ? அது முதல் துரோகம். 2வது துரோகம் என்னவென்றால், எடப்பாடி பழனிசாமி ஒ பன்னீர் செல்வத்தை வெளியேற்றியுள்ளார். இந்த 2 ஐயும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.. எம்ஜிஆர் விஸ்வரூபம் எடுத்து திமுக இல்லாமல் செய்தார்.. இதேபோல் வரும் ஜூன் 4 ஆம் தேதிக்கு பிறகு ஓ பன்னீர் செல்வத்தின் விஸ்வரூபத்தை தமிழ்நாடு பார்க்கத்தான் போகிறது. தொண்டர்கள் எல்லாருக்குமே தெரியும் உண்மையான தலைவன் யார்?.. மக்களுக்கு பணி செய்யக்கூடிய தலைவன் யார்?.. எல்லாவற்றையும் தாண்டி ஜெயலலிதா தன் மொத்த நம்பிக்கையையும் யார் மீது வைத்தார்.. அதுவும் நமது ஓ பன்னீர் செல்வம் தான். இதனை சாதாரண தேர்தல் என்று நினைக்காதீர்கள்.. லோக்சபா தேர்தல் அல்ல.. தமிழகத்தின் அரசியலை மாற்றி எழுதுகின்ற தேர்தல்.
இன்றைக்கு என் கையில் சில டாக்குமெண்ட் இருக்கிறது. அதனை இப்போது வெளியிடுகிறேன். கடந்த 1974 ஆம் ஆண்டு நம் தமிழ்நாட்டோடு இருந்த கட்சத்தீவை இலவசமாக இலங்கைக்கு கொடுத்தவர்கள் தான் இந்த திமுகவும் காங்கிரசும்.. நாம ஒரு டீ கொடுத்தால் கூட காசு கொடுத்து தான் குடிப்போம். ஆனால் இலவசமாக தாரை வார்த்துவிட்டனர். கொடுக்கிற மாதிரி கொடுங்கள் நாங்கள் நடிக்கிற மாதிரி நடிக்கிறோம் என்று திமுக சொன்னது. இந்திராகாந்தி கச்சத்தீவை கொடுத்தது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கருணாநிதியிடம் பத்திரிகையாளர்கள் கேட்கிறார்கள்.. அதற்கு கருணாநிதி பதில், கேட்டவுடன் பதறினேன்.. துடிதுடித்தேன். என்னுடைய உதடுகள் துடிதுடித்தது என்று சொன்னார். அதிகாரப்பூர்வமாக இலங்கைக்கு கச்சத்தீவை கொடுத்த பிறகு கருணாநிதி இப்படி கூறினார். அவர் மட்டும் அப்போதே கம்பீரமாக எதிர்த்து இருந்தால் இப்படி நடந்திருக்குமா? மீனவர்களுக்கு இப்படி ஒரு அநீதியை இழைத்துவிட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.