தேர்தல் விதிகளை மீறியதாக போலீசார் கூறிய நிலையில், கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை நேற்றிரவு திடீர் சாலை மறியல் போராட்டம் முன்னெடுத்தார்.. இதையடுத்து, அண்ணாமலை மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை லோக்சபா தொகுதியில் இந்த முறை போட்டியிடுகிறார். அண்ணாமலை போட்டியிடுவதாலேயே கோவை தொகுதி தேசிய அளவில் கவனத்தை பெற்று வருகிறது. சொந்த மாவட்டம் என்பதுடன், மாநில தலைவர் என்பதாலும் இந்த முறை தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயமும், நெருக்கடியும் அண்ணாமலைக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தீவிரமான பிரச்சாரத்தை செய்து வருகிறார். அந்தவகையில் நேற்றைய தினமும் அண்ணாமலை மற்றும் பாஜகவினர் கோவையில் பல இடங்களில் தீவிர பிரச்சாரம் செய்து வந்தனர்.. பின்னர் காரில் அண்ணாமலை சூலூரை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென்று அங்கு சென்ற போலீசார் அண்ணாமலையின் காரை தடுத்து நிறுத்தினார்கள். எதற்காக காரை நிறுத்துகிறீர்கள் என்று அண்ணாமலை கேட்டார்.. அதற்கு போலீசார், இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்யக்கூடாது, அதனாலேயே காரை தடுத்து நிறுத்துவதாகவும் போலீசார் சொன்னார்கள். இதைக்கேட்டதுமே அண்ணாமலை ஆவேசமானார். உடனே காரிலிருந்து அண்ணாமலை கீழே இறங்கி, போலீசாருடன் வாக்குவாதம் செய்தார்.
“நான் 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்யலையே.. பிரச்சாரத்தை முடித்துவிட்டு காரில் வீட்டுக்குதானே போகிறேன்? எங்க மைக் இருக்கு? நாங்கள் மைக்கை ஆஃப் செய்து வைத்திருக்கிறோம்.. மைக்கில் பேசுகிறோமோ? பிரச்சாரம் செய்கிறோமோ? தாமரை என்ற வார்த்தையையாவது சொன்னேனா? எனக்கு ஓட்டுப்போடுங்கள் என்று மக்களிடம் கேட்டானா? எதுவுமே நான் செய்யவில்லையே? 10 மணிக்கு மேல் நான் பிரச்சாரம் செய்ததாக ஏதாவது ஒரு வீடியோ இருக்கா? போட்டோ இருக்கா? இருந்தால் காட்டுங்கள் பார்க்கலாம். இதோ கையை இப்படியே கும்பிடுவது போல வைத்துக் கொண்டு காரில் உட்கார்ந்துகொண்டுதானே இருந்தேன்? அதெப்படி பிரச்சாரமாகும்? இரவு 10 மணிக்கு பிரச்சாரத்தை முடித்துவிட்டேன்.. ஒரு வேட்பாளர் பிரச்சாரத்தை முடித்துவிட்டு வீட்டுக்கு செல்கிறார். இரவு 10.30 மணிக்கு ஒரு இடத்தில் காரை நிறுத்தி டீ குடிக்கக்கூடாதா? இது எப்படி விதிமீறலாகும்? நீங்கள் என்னிடம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறீர்கள்” என்று போலீசாரிடம் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து, அண்ணாமலை தன்னுடைய ஆதரவாளர்களுடன் இணைந்து, சூலூரில் சாலைமறியலில் ஈடுபட்டார்.. அதற்கு பிறகு உயரதிகாரிகள் விரைந்து வந்து அண்ணாமலையுடன் சமாதானம் பேசியதையடுத்து, மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் இரவு நேரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுவிட்டது. அதாவது, சூலூர் பாப்பம்பட்டி பிரிவில் இரவு 9.57-க்கு தன்னுடைய பிரச்சாரத்தை நிறைவு செய்திருக்கிறார் அண்ணாமலை.. தன்னுடைய வாகனங்களிலும் முகப்பு விளக்குகளை அணைத்துவிட்டு வழக்கம்போல், வாகனத்தில் வந்துள்ளார்.. மைக், ஸ்பீக்கர்கள் எதுவுமே பயன்படுத்தப்படவில்லை.. ஆனால், காமாட்சிபுரம் பகுதியில் வாக்காளர்களை பார்த்து கையசைத்தபடியே வாக்கு கேட்டு வந்ததாக தெரிகிறது. உடனே இதுகுறித்து போலீசாருக்கு புகார் சென்றுள்ளது.. அதற்கு பிறகுதான், அண்ணாமலையின் வாகனத்தை நிறுத்தி உள்ளனர் போலீசார். திடீர் சாலை மறியலில் அண்ணாமலை ஈடுபட்டதால், உயரதிகாரிகள் அண்ணாமலையிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோதும், சாலையிலேயே உட்கார்ந்திருந்தார் அண்ணாமலை.. இரவு 11 மணி வரை அப்படியே உட்கார்ந்திருந்ததால், கோவை – திருச்சி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதற்கு பிறகே போராட்டத்தை கைவிட்டார் அண்ணாமலை.
இந்த சம்பவம் தொடர்பாக தேர்தல் அதிகாரி சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.. அந்த புகாரின் அடிப்படையில் 2 பிரிவுகளின் கீழ் அண்ணாமலை மீது சூலூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.