ஜிஎஸ்டி மூலம் மத்திய அரசு வழிப்பறிக் கொள்ளையடிக்கிறது: உதயநிதி ஸ்டாலின்!

தமிழகத்தில் இருந்து ஜிஎஸ்டி மூலம் மத்திய அரசு வழிப்பறிக் கொள்ளை அடித்து வருகிறது என அமைச்சர் உதயநிதி குற்றஞ்சாட்டினார்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட ஒத்தக்கடை பகுதியில், ஈரோடு மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து இன்று (ஏப்.16) காலை பிரச்சாரம் செய்தார் அமைச்சர் உதயநிதி. அப்போது அவர் பேசியதாவது:-

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்தவர்கள் மற்றும் வாக்களிக்கத் தவறிய மக்களும் பெருமைப்படும் வகையில் முதல்வர் ஸ்டாலின் பணிபுரிந்து வருகிறார். உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வர் ஆனார் ஸ்டாலின். ஆனால், பழனிசாமியை நீங்கள் முதல்வராக தேர்ந்தெடுக்கவில்லை. பாஜகவுடன் நான்கு ஆண்டுகள் கூட்டணியில் இருந்து, தமிழகத்தின் உரிமைகள், மொழி, நிதி, கல்வி உரிமைகளை பழனிசாமி விட்டுக் கொடுத்து விட்டார். பாஜகவுக்கு பயந்து நீட் தேர்வினை தமிழகத்தில் அனுமதித்து விட்டார். நீட் தேர்வினால், இதுவரை 21 மாணவ, மாணவியர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். திமுக ஆட்சி அமைந்த பிறகு, நீட் தேர்வினை ரத்து செய்ய சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திமுக ஆட்சிக்கு வந்ததும் பால் விலை, பெட்ரோல் விலை குறைக்கப்பட்டது. கொரோனா காலத்தில், பி.எம்.கேர் என்ற பெயரில், வசூலிக்கப்பட்ட ரூ.32 ஆயிரம் கோடிக்கு இதுவரை கணக்கு காட்டவில்லை. ஆனால், தமிழகத்தில் கொரோனா காலத்தில் உதவித்தொகை வழங்கப்பட்டது. இலவச பேருந்து பயண சலுகையை, ஈரோடு மாவட்டத்தில் 21 கோடி முறை பெண்கள் பயன்படுத்தி உள்ளனர். புதுமைப்பெண் திட்டம் மூலம் 11 ஆயிரம் மாணவிகள் பயன்பெற்று வருகிறார்கள். காலை உணவுத் திட்டத்தில், 56 ஆயிரம் மாணவர்கள் பயன்பெற்று வருகிறார்கள். 4 லட்சம் மகளிர் உரிமைத் தொகை பெற்று வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தைப் பொறுத்தவரை, மொடக்குறிச்சியில் மஞ்சள் ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை, ரூ.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சோலார் புறநகர் பேருந்து நிலையம், சோலார் பகுதியில் விளையாட்டு அரங்கம் அமைக்க நடவடிக்கை, ரூ. 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காய்கறிகள் சந்தை, சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லான் நினைவிடம் அமைக்க இடம் தேர்வு, அறச்சலூர் மலை கோயிலுக்கு செல்ல பாதை வசதி போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரவுள்ளன.

முதலமைச்சர் காலை உணவு திட்டம் இந்தியாவில் சிறப்பு வாய்ந்த திட்டமாக உள்ளது. இத்திட்டம் மூலம், 18 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகிறார்கள். தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் காலை உணவு திட்டம் செயல்படுத்த இருப்பது தான் திராவிட மாடல் அரசு சாதனை.

கடந்த 10 ஆண்டுகள் நாட்டை ஆண்ட பாஜக தமிழகத்துக்கு எதுவும் செய்யவில்லை. சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் வெள்ள பேரிடர் போது மத்திய அரசு உதவி செய்யவில்லை. ஜிஎஸ்டி மூலம் வசூல் செய்யப்படும் தொகையை மத்திய அரசு முறையாக, சரிசமமாக, மாநிலத்துக்கு நிதியை பகிர்ந்து வழங்குவதில்லை. தமிழகத்தில் இருந்து ஒரு ரூபாய் வரி வசூலித்தால், 29 பைசா மட்டும் திரும்ப வருகிறது. தமிழகத்தில் இருந்து ஜிஎஸ்டி மூலம் மத்திய அரசு வழிப்பறிக் கொள்ளை அடித்து வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளாக, தமிழகத்துக்கு வராத பிரதமர் மோடி, தேர்தலுக்காக தற்போது அடிக்கடி வருகிறார். பாஜக – அதிமுக கூட்டணி இல்லை என்று இப்போது நாடகம் போடுகின்றனர். தேர்தலுக்கு பிறகு, இருவரும் ஒன்று சேர்ந்து விடுவார்கள். கடந்த தேர்தலில் அடிமை அதிமுக வை விரட்டி அடித்தது போல, இந்த முறை அதிமுக எஜமானர்களான பாஜகவையும் விரட்டி அடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர் உதயநிதி தனது பிரச்சாரத்தில் பிரதமர் மோடி- அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியுடன் இருக்கும் படம், செங்கல், 29 பைசா பதாகை போன்றவற்றை காட்டி அதுகுறித்து விளக்கம் அளித்தார்.